August 8, 2025
ஜாக்சன் துரை 2025

ஜாக்சன் துரை 2025

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வருவது இந்தியாவிற்கு சாதகமானதல்ல என்று எல்லாரும் கணித்தது தவறில்லை என்பதை அவரது சமீபத்திய அடுத்தடுத்த நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.

“வேலை வாய்ப்பு , குடியிருப்பு , உட்பட எல்லாவற்றிலும் அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை” என்று மண்ணின் மைந்தராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு அமெரிக்க மக்களை நம்ப வைத்து டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார் என்பது உலகறிந்த உண்மை.

வெற்றி பெற்றதும் முறையற்று தங்கியிருந்த இந்தியர்களை கைதிகளாக நடத்தி நாடு கடத்தியது, வேலை வாய்ப்புக்கான விசா வழங்குதலில் கடுமையான சட்டத் திட்டங்களை கொண்டு வந்தது, வெளிநாட்டினருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு அமெரிக்க நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவதைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்துவது , நீண்ட காலம் வசிக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதை கால தாமதப்படுத்துவது போன்றவற்றில் அவர் காட்டி வரும் கடுமை இந்தியர்களை நேசிக்கும் அமெரிக்கர்களையே அண்மைக்காலத்தில் கடுப்பேற்றி வருகின்றது.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் எல்லா நாட்டுப் பொருட்களுக்கும் அதிரடி வரி விதிப்பை உடனடியாய் அமல்படுத்தியவர் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை .25 சதவீத வரி விதிப்பு என்று சொல்லி 24 மணி நேரத்திற்குள் 50 சதவீத வரி விதிப்பைத் திணித்து இந்தியாவை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறார்

ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கியதுதான் காரணம் என்பது மேலோட்டமான காரணம் என்றாலும், பஹல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் போர் தன்னால்தான் நின்றது என்று அவர் உலக அளவில் சொல்லியது வடிகட்டிய பொய் என்பதை இந்தியா பகிரங்கமாய் வெளிப்படுத்தியதால் மூக்குடைப்பட்ட அவமானம்தான் உண்மையான காரணம்.

சீனா உட்பட எல்லா நாடுகளுமே அதே குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும்போது நாம் மட்டும் வாங்கக் கூடாது என்ற சொல்ல டிரம்ப் என்ன நம் எஜமானரா ? இல்லை உடனே வரி கட்டு என்று கட்டளையிட அவர் என்ன ஜாக்சன் துரையா ?

140 கோடி மக்களைக் காப்பாற்ற நான் செய்தது சரிதான் என்று வரி விதிப்பைக் கண்டு அஞ்சாமல் நாங்களும் 40% வரி விதிக்கிறோம் என்று நம் பிரதமர் நரேந்திர மோடி கட்டபொம்மன் போல் கர்ஜித்து, 24 மணி நேரம்தான் என்று கொக்கரித்த அமெரிக்க அதிபரை 21 நாள் அவகாசம் தரும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் என்றால் .. “கொக்கென்று என்று நினைத்தாயா கொங்கனவா? “என்று கேட்டிருப்பதாகவே அர்த்தம் .

இந்த இக்கட்டான நேரத்தில் ..கட்சி பாகுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையுடன் ஓரணியில் இணைந்து அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரப் போரை எதிர்கொண்டு விரைவில் வெற்றி பெற்றாக வேண்டும்

இந்திய அரசு வரி விதிப்பைக் குறைக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு .. நமது ஏற்றுமதி சந்தையை மேலும் பல நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். டிரம்பை டிராப் செய்ய வேண்டும் .

அன்று நாம் நடத்திய அந்நிய ஆடை எதிர்ப்புப் போராட்டம் போன்று அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து இன்றைய நமது எதிர்ப்பை 2025 ஆம் ஆண்டின் ஜாக்சன் துரைக்குத் தெரிவிக்க வேண்டும்.

“பயந்து பணிந்து மிரண்டது போதும் – இனி தெளிந்து துணிந்து மீண்டெழ வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை நினைவிற் கொண்டு உரத்து சிந்தித்து ஜாக்சன் துரை 2025க்கு பதிலடி கொடுத்து பாரதத்தைத் காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *