
மதுரை அருகே ஆய்வுப் பணிகள்: ஆட்சியர்:
மதுரை.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் (07.08.2025) மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 16.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 மீட்டர் உயரமுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் தண்ணீர் தரம் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.

கட்டாய குளோரினேஷன் மற்றும் மேல்நிலை தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கட்டக்குளம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 167 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 612 குடும்ப அட்டைகள் கொண்ட T.ஆண்டிப்பட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது முதியோர்களுக்கு நியாய விலைக்கடை பொருட்களை வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கும் திட்டம் தொடர்பாக எண்ணிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டிருந்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் , மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், வனச்சரக அலுவலக வளாகத்தில் வனத்துறை வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 16.87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து, வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பண்ணையில், 20,000 தேக்கு, 15,000 மகாகனி, 5000 குமிழ், 3000 தோதகத்தி, 4000 வேங்கை, 3000 செம்மரம் உள்ளிட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில்
புதிதாக கட்டப்பட்டு வரும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் கொண்ட கட்டமாக கட்டப்படவுள்ளது. தரைத்தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவர் அலுவலகம், மன்றக் கூட்ட அரங்கம் மற்றும் தேர்தல் பிரிவு கொண்ட தளமாகவும், முதல் தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பொறியியல் பிரிவு மற்றும் கோப்புகள் பராமரிக்கப்படும் பிரிவு கொண்ட தளமாகவும், இரண்டாம் தளமானது காணொளி காட்சி கூட்ட அரங்கு கொண்ட தளமாகவும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் , மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் , கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், குழந்தைகளின் வாசித்தல்,எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்கள் குறித்து ஆய்வு செய்தார்.