
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் தேவை மற்றும் சில கோரிக்கைகள் - மும்பை விழித்தெழு இயக்கம்
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் தேவை மற்றும் சில கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக வைக்கிறோம்.
- எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்.
- சாதிய ஆணவக் கொலை வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும். குற்றவாளி சொத்துக்கள் அரசு உடைமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தருவது. தண்டனை கடுமையாக இருந்தால் பயம் ஏற்படலாம். அதனால் குற்றங்கள் குறையலாம்.
- தனிச்சட்டம் அவசியம் தேவை. சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டால் கொலைக் குற்றவாளி மட்டுமில்லாமல், கொலை செய்யத் தூண்டியவர்கள், அதை ஆதரித்துப் பேசக்கூடியவர்கள், நியாயப்படுத்தக் கூடியவர்களைத் தண்டனை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
- இதுபோன்ற கொலைகள் நிகழ்த்தப்படும்போது பாதிக்கப்படும் பெண்களை குடும்பத்தினரிடமிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் அரசு தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
- சாதி மாறி காதலிப்பவர்களுக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.
- சாதி வெறியை ஊட்டி வளர்க்கும் இடத்தில் சமூக ஊடகங்கள் முதலிடத்தில் உள்ளன. சமூக ஊடங்கங்கள் கண்காணிக்கப்பட்டு தணிக்கைசெய்யப்பட வேண்டும்.
- சமூக அமைதியை உருவாக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்களும், காவலர்கள், காவல்துறை அதிகாரிகளும் சாதிய கறைபட்டுப் போய் இருக்கிறார்கள். சாதிப்பாசத்தோடு வெறுப்புணர்வை ஊட்டி வளர்க்கிறார்கள் அல்லது கண்டும் காணாமல் கடந்து போகிறார்கள். இவர்களுக்கு சமூக நீதி சமத்துவம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் சொந்த ஊரில், மாவட்டத்தில் பணியமர்த்த கூடாது .இவர்கள் மீது புகார் வரும்நிலையில் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் .
- பள்ளிகளிலும், பொதுவெளிகளிலும் நீதிபோதனைகளும், சமூக சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
- பொதுவெளிகளில் சாதிய அடையாளங்களை ஒழிக்க வேண்டும். சாதியின் பெயரால் பெருகிவரும் பெருங்கூட்ட விழாக்களை, குருபூஜை, நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்.
- சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்கின்ற இடத்தில் கொடிகள், தோரணங்கள், ஊர்வலங்கள், சாதிய அடையாளங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சாதி வெறி, ஒரே சாதியாக இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வு, ஆண் ஆதிக்க சிந்தனை, அகமண முறையில் ஆழ்ந்த பிடிப்பு, சாதி வெறியை ஊட்டி வளர்க்கும் சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், சாதி அமைப்புகள்; இவையே ஆணவக் கொலைகளுக்கான தலையாயக் காரணங்கள்.
சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மட்டும் போதாது. எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் இதுவரை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை சட்டத்தை நீதிமன்றமோ, காவல்துறையோ, அரசு நிர்வாகமோ செயல்படுத்துவதில்லை;
தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகச் சட்டம் சொல்லி 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றுவரை தீண்டாமை நடைமுறையில் உள்ளது. ஏற்கெனவே பி.சி.ஆர். சட்டம் இருந்தது. அதுபோதாது என்று எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அதில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.
பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) கீழ் வழக்கமான கொலை வழக்காகப் பதிவு செய்து மேற்கொள்ளப்படும் விசார ணைகளால் ஆணவக் கொலைகள் பூசி மெழுகப்படுகின்றனவே தவிர அவற்றைத் தடுக்க முடிவதில்லை.
இந்த அளவுக்கு வலிமையான சட்டம் இருந்தும், அது ஏன் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகள் புதிய சட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்றன. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசு தனிச்சட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும். அதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ஒன்றில், சாதி மாறி காதலிப்பவர்களுக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை மாநில அரசு உடனடியாக செய்ய வேண்டும்
சட்டத்தை நீதிமன்றமோ, காவல்துறையோ, அரசு நிர்வாகமோ செயல்படுத்துவதில்லை; சமூகத்தின் மனசாட்சிதான் நடைமுறைப்படுத்துகிறது என்பார் பாபாசாகேப் அம்பேத்கர்.
சமூக குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களின் கடமை. மக்கள் ஒத்துழைத்தால்தான் அரசின் திட்டங்கள் வெற்றிபெறும். சட்டங்கள் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.
சட்டத்துக்கு சமூகத்தின் கூட்டு மனசாட்சி இசைவு அளிக்கவில்லை என்றால் எந்தச் சட்டம் கொண்டுவந்தாலும் பயனளிக்கப்போவதில்லை.
ஆனால், இங்கு சமூகம் என்பதே இல்லை. பிறகு எங்கு கூட்டு மனசாட்சி என்பது இருக்கப்போகிறது? சாதியக் குழுக்களைச் சமூகமாக்க முதலில் நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
சாதிச் சங்க மாநாடுகளையும் விழாக்களையும் நடக்க அனுமதி அளித்துவிட்டு, சாதிப் படுகொலைகள் நடக்கும்போது கவலைகொள்கிறோம். இந்த சமூகம்தான் முதல் குற்றவாளி.
ஆணவக் கொலைகள் குறித்த உச்ச நீதிமன்ற “Shàkti Vahini vs Union of India” 27-03-2018 மற்றும் சென்னை நீதிமன்ற நீதி அரசர் வீ. ராமசுப்பிரமணியன் அவர்கள் கொடுத்த ” B.Dilipkumar vs The Secretary to TN Govt” 13-04-2016 (உசிலம்பட்டி விமலா தேவி மரணம்)தீர்ப்பும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளன. இவையும் நீதி அரசர்கள் உருவாக்கிய சட்டங்களாகவே கருதப்பட வேண்டும் (Judge made laws)இந்த நடைமுறைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பட்டியலின உரிமைகளுக்காக போராடும் தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த 2022-இல் தமிழக முதல் வரிடம் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்ட முன்வ டிவு நகல் ஒன்றை அளித்தன. அதன் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
என்பது கவலைக்குரியதாகும்!
“தான் விரும்பும் ஒருவரை மணப்பதற்கான தேர்வு உரிமை” அரசியல் அமைப்பு சட்டத்தில் பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமையின் பாற்பட்டதாகும். 242 வது சட்ட ஆணையம் (Law commission) ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனி சட்டம் தேவை என்பதை பரிந்துரைத்து- அதற்கான சட்ட முன் வரைவையும் வழங்கி உள்ளது. எனவே தேசிய அளவில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். ராஜஸ்தான் மாநில அரசு இதற்கான தனிச்சட்டத்தை 2019-ல் இயற்றியுள்ளது. ஆயினும் அதன் செயல்பாடு இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
தனிச்சட்டம் ஏன் தேவை?
இப்போதும் நடைமுறையில் உள்ள சில சட்டங்களை ஆணவக் கொலைக்கு காரணமாயிருக்கும் உயர்சாதியினரின் மீது கறாராகப் பயன் படுத்துவதில்லை. இது தவிர, பட்டியல் பிரிவில் இருக்கும் அருந்ததிய இளைஞன் ஒருவேளை தேவேந்திரர் அல்லது பறையர் சாதிப் பெண்ணை காதலித்தோ அல்லது மணந்தோ அதனால் ஆணவப் படுகொலை ஏற்படுமாயின், அது பட்டியல்-பழங்குடி மக்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது. இம்மாதிரி பல காரணங்களை சுட்ட முடியும். எனவே ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் தேவை.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் தேவை மற்றும் சில கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் கோரிக்கை வைத்துள்ளார்








