
புதுச்சேரி உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள் - நகராட்சி அதிகாரிகளுடன் எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆலோசனை
புதுச்சேரி ஜூலை 24.
உப்பளம் சட்டமன்ற தொகுதியில் வேகமாக நடைபெற வேண்டிய மேம்பாட்டு பணிகள் மற்றும் திட்டமிடல் தேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், சட்டமன்ற உறுப்பினர் குறிப்பாக லதிப் சந்து, பாண்டியன் சந்து, அப்பாவு மேஸ்திரி வீதி, பொண்ணியாகுட்டி வீதி, வவுசி வீதி, மொராசன் வீதிகளில் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
மேலும், வாணரப்பேட்டை பகுதியில் பொதுப்பணி துறையின் மூலம் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அதனுடன், பிரான்சுவா தோப்பிலும் ராசு உடையார் தோட்டத்திலும் கழிவறை வசதி மேம்பாடு கட்டிடம் பணிகள், குபேர் மண்டபம் மற்றும் அவ்வை தோட்ட கல்யாண மண்டபத்தின் புரணமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் போது, குபேர் மண்டபத்தின் புனரமைப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வது குறித்து வரும் வெள்ளிக்கிழமையில் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற திட்டமிடப்பட்டது.
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார், கிளை செயலாளர் ராகேஷ், மாணவரணி உறுப்பினர் பவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு முடிவில், சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.