
காஞ்சிபுரத்தில் இருக்கும் நவகிரக தலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் .....
கும்பகோணத்தில் அமைந்திருப்பது போன்று காஞ்சிபுரத்திலும் பழமையான நவகிரக தலங்கள் அமைந்துள்ளன. அருகருகே அமைந்துள்ள இந்த தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியும்.
சூரியன்-பரிதீஸ்வரர் கோவில்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சூரிய பரிகார தலம் அருள்மிகு பரிதீஸ்வரர் கோவில். பல்லவ மன்னர்களால் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட இத்தலம் சிறியதாகக் காட்சி தருகிறது. இத்தலத்தில் சூரிய பகவான் ஈசனை வழிபட்டு கிரகப் பதவியினை அடைந்ததாக ஐதீகம். பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள செவ்வந்தீஸ்வரர் கோவிலைக் கடந்து சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கு அருகில் உள்ள பருத்திக்குளத்தின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
திங்கள்- சந்திரேஸ்வரர் கோவில்
திங்கள் பரிகார தலமாக சந்திரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது தற்போது வெள்ளைக்குளம் என்று அழைக்கப்படும் சந்திர தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது. சந்திரேசம் என்று அறியப்படும் இத்தலம் காஞ்சி புராணத்தில் சோமேச்சுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளைக்குளம் என்ற பகுதியில் சந்தவெளி அம்மன் கோவிலுக்குப் பின்புறத்தில் உள்ள தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.
செவ்வாய் – செவ்வந்தீஸ்வரர் கோவில்
செவ்வாய் பரிகார தலமான செவ்வந்தீஸ்வரர் கோவில் கி.பி.ஏழாம் நூற்றான்டில் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பட்டது. இத்தலம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. அங்காரகன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து செவ்வந்தி மலர்களைக் கொண்டு வழிபட்டதாக ஐதீகம். ஏகாம்பரநாதர் கோவிலின் அருகில் அமைந்துள்ள பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணையின் உட்புற வளாகத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
புதன் – சத்யநாத சுவாமி கோவில்
புதனுக்குரிய தலமான பிரமராம்பிகை சமேத ஸ்ரீ சத்யநாத சுவாமி கோவில் திருக்காலிமேடு என்ற பகுதியில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் இது, பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரெயில்வே ரோடில் இருக்கும் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் செல்லும் பாதையில் பயணித்தால் திருக்காலிமேட்டை அடையலாம்.
குரு – காயாரோகணேஸ்வரர் கோவில்
குரு பரிகார தலமாக விளங்கும் காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
சுக்கிரன்- இஷ்ட சித்தீஸ்வரர் கோவில்
சுக்கிரன் பரிகார தலமான இஷ்ட சித்தீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோவிலுக்குள் தனி சன்னிதியாக அமைந்துள்ளது. இந்த சன்னிதி மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
சனி – மணிகண்டீஸ்வரர் கோவில்
மரகதாம்பிகை உடனுறை மணிகண்டீஸ்வரர் திருக்கோவில் சனி பரிகார தலமாகும். ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இத்தலம், பிற்கால சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமை கொண்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சின்ன காஞ்சிபுரத்தில் தேரடியிலிருந்து வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் திருக்கச்சி நம்பி தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.
ராகு, கேது – மாகாளேஸ்வரர் கோவில்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாகாளேஸ்வரர் திருக்கோவில் ராகு, கேது பரிகார தலமாகும். காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பின்புறத்தில் மேற்கு ராஜகோபுரத்திற்கு அருகில் ஜவஹர்லால் தெருவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுவும் கேதுவும் மனித உருவத்தில் எழுந்தருளியுள்ள அபூர்வ தலங்களில் இதுவும் ஒன்று.
தெரிந்து கொள்வோம்…..