
தமிழகத்தின் கனவு, ஊழல் வலையில் சிக்கியதா? கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகர் சந்திரசேகரன் மீது புகார்கள்
தமிழ்நாட்டில் குடிசைவாசிகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் பணி 1975 ஆம் ஆண்டு முன்னோடி முயற்சியாகத் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ 2010 இல் தொடங்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் ‘குடிசைகள் இல்லாத தமிழகத்தை’ உருவாக்க, கலைஞர் கனவு இல்லம் என்ற புதிய திட்டம் 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பல கட்டங்களாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 2025-26 ஆம் நிதியாண்டில், மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட தமிழக அரசு ₹3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சொந்தமாக நிலம் இல்லாத பயனாளிகளுக்கு இலவசமாக 360 சதுர அடி நிலமும், கான்கிரீட் வீடும் கட்டித் தரப்படும். சில மாதங்களுக்கு முன் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இராமநாதபுரம் வந்த போது இம்மாவட்டத்திற்கு மட்டும் 2000 பயனாளிகளுக்கு மேல் ஏழை எளிய மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கமுதி வட்டாரத்தில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
தகுதி வாய்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை எனவும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலைஞர் வீடு வேண்டி கொடுக்கும் மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் ஊராட்சிமன்ற தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.“மக்கள் கனவுக்காக வந்த வீடுகள், அதிகாரிகளின் பேராசை வியாபாரமாகி விட்டது!” “தகுதியான ஏழைகள் புறக்கணிப்பு கலைஞர் வீடுகள் அதிகாரிகளின் சதியில் சிக்கின!” இந்த சம்பவம், தமிழக அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.






