
ராமநாதபுரம் அருகே இடி தாக்கி சிறுமிகள் பலி:தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட தமிழர் அதிகாரம் கோரிக்கை
ராமநாதபுரம்,ஆக.25:-
தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே அரியக்குடி புத்தூர் கிராமத்தை சேர்ந்த நூருல் அமீன்-ஹைர் நிஷா தம்பதியினரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13),சபிக்கா பானு (9) வீட்டின் எதிரே உள்ள வயல்வெளியில் வேப்பம் முத்து சேகரித்து கொண்டிருந்த போது இடி தாக்கி உயிர் இழந்தனர்.
சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யது அஸ்பியா பானு (13) 9-ம் வகுப்பு படிக்கிறார்.மற்றொரு மகள் சபிக்கா பானு (9), அரியக்குடி புத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார்.பள்ளி விடுமுறையின் காரணமாக மதியம் தாயாரோடு சேர்ந்து வேப்ப மரத்தில் வேப்பம் முத்து சேகரித்து கொண்டிருந்தனர்.அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் இரு சிறுமிகளும் பலியாகினர்
ஏழ்மையான இந்த குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரண அறிவித்திட வேண்டும் என தமிழர் அதிகாரம் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
தமிழக மக்களால் அப்பா என்று அழைக்கப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணை உள்ளத்தோடு இந்த குடும்பத்தை அணுகி அவர்களுக்கு இழப்பீடு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தமிழர் அதிகாரம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






