
அலங்காநல்லூர் அருகே சிறுவாலை கிராமத்தில் கனமழை காரணமாக நீரில் முழுவதுமாக மூழ்கிய நெற்பயிர்கள்.. பாசன கால்வாய்களை முறையாக தூர்வாராததே காரணம்… விவசாயிகள் குற்றச்சாட்டு !
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சிறுவாலை கிராமத்தில், சிறுவாலை மேற்கு கண்மாய் மூலம் பாசனம் பெறும் சுமார் 140 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் பயிர் சமீபத்தில் நடவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி காணப்படுகிறது.
சிறுவாலை கிராமத்தில் இருந்து வெளியேறும் நீர் பாசன கால்வாய்களை முறையாக தூர்வாராத காரணத்தால், நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், சிறுவாலை கிராமத்திற்கு கீழ் பகுதியில் உள்ள கீழ் கண்மாய் மூலம் பாசனம் பெறும் சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் மழைநீர் பாய்ந்து உள்ளது இங்கே வெளியேற்றப்படும் கழிவுநீர்கள் அரியூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கண்மாயில் சென்று சேர்வதால் அரியூர் பகுதியில் நடவு செய்துள்ள நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு உள்ளது என, கூறுகின்றனர்.
எனவே, நீர் பாசனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து இப்பகுதி பாசன கால்வாய்களை முறையாக தூர் வார வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் தொடக்க காலத்திலேயே விவசாயிகள் அதிக அளவு சிரமத்தில் உள்ளதால் பருவமழை தீவிரம் ஆவதற்கு முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டனர்.
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், வாலாந்தூர், செல்லம்பட்டி, எருமார்பட்டி, கோடாங்கி நாயக்கன்பட்டி, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழை காரணமாக, உசிலம்பட்டி நகர் பகுதியில் மழை நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆறாக ஓடியது.
மதுரை ரோடு, பேரையூர் ரோடு பகுதியில் சாலையில் சென்ற மழைநீர் வாகனங்கள் ஊர்ந்தவாரே அணிவகுத்து சென்றனர்.

திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் ஆடி பட்டத்திற்கான விதைப்பு பணிக்காக காத்திருந்த விவசாயிகள் விதைப்பு பணியை துவங்க மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






