March 4, 2026
வைகைஅணை 68.5 அடியாக உயர்வு. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

வைகைஅணை 68.5 அடியாக உயர்வு. இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

ஆண்டிபட்டி
வைகைஅணையின் நீர்மட்டம் 68.5அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கொள்ளளவை நெருங்கும் நிலை உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. தற்போது கேரள, தமிழக எல்லையில் தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மூலவைகையில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு ஆயிரத்து 867கனஅடிநீர் கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் வைகைஅணைக்கான நீர் வரத்து அதிகரித்தபடி இருந்தது. இந்நிலையில் ஜூலை 20-ம் தேதி 63.77அடியாக இருந்த நீர்மட்டம்(மொத்த உயரம் 71) படிப்படியாக அதிகரித்து 26-ம் தேதி 66அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு அன்று வெளியிடப்பட்டது. தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல்போகம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 769கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் நீர்வரத்தினால் அணையின் நீர்மட்டம் இன்று 68.50அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

69அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும். இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது விநாடிக்கு ஆயிரத்து 594கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் 69அடியை எட்டிவிடும். இருப்பினும் நீர்வரத்துக்கு ஏற்ப நீர்மட்டத்தை 69அல்லது 71அடியில் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கைக்குப் பிறகு எந்த நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் 5 மாவட்டத்தின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *