
கூலித் தொழிலாளிக்காக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினரால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, கூலித்தொழிலாளரிடம் வீடு அடமான கடன் பெற்று தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தினர் நூதனமாக மோசடியில் ஈடுபட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் வத்தலகுண்டு காவல் நிலையத்தை வியாழக்கிழமை இரவு திடீர் முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பச்சமலையன்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி வைத்தியலிங்கம் (67) இவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு வத்தலகுண்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தினர் மூன்று நபர்கள், ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வீடு அடமான கடன் பெற்று தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான வீட்டை ஆத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வீடு அடமான கடன் தொகை மைக்கேல்பாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் உங்களது வங்கி கணக்கில் ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரம் செலுத்தப்படும் என, கூறியுள்ளனர்.
படிக்கத்தெரியாத கூலித்தொழிலாளியிடம் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தொகை எழுதப்படாத காசோலைகளை பெற்றுக்கொண்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனியார் நிதி நிறுவனத்தினர் செலுத்தி விட்டு அதே தொகையை வைத்தியலிங்கத்திடம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எழுதப்படாத காசோலையை நிரப்பி, நூதனமான முறையில் ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதன்படி கடந்த 25 மாதங்களாக அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று நபர்கள் மாதம் ரூபாய் 8600 வீதம் கூலித்தொழிலாளி வைத்தியலிங்கத்திற்கு தெரியாமலே அவரது, அடமான கடன் தொகைக்கான தவணையை செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தத் தொகை செலுத்தப்படாததால் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய புதிய நபர்கள் வைத்தியலிங்கத்திடம் சென்று நீங்கள் கடந்த மூன்று மாதமாக தவணத் தொகை செலுத்தவில்லை என கூறிய போது தான் வாங்காத கடனுக்கு எப்படி? தவணை தொகை செலுத்த முடியும் என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். இதுகுறித்து கூலித்தொழிலாளி வைத்தியலிங்கம் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியலிங்கத்தை ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன நபர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீதி தவணை தொகையை செலுத்த வேண்டும் என தற்போது உள்ள நிதி நிறுவன ஊழியர்கள் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையில் இருந்த வைத்திலிங்கத்தின் மனைவி ராஜாமணி என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், பாஜக நிர்வாகியிடம் தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டதாக கூறியதையடுத்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் வத்தலகுண்டு காவல் நிலையத்தை இரவில் திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டினர்.
இந்த போராட்டத்தின் போது பாஜகவினர் கூட்டமாக காவல் நிலையத்திற்குள் புகுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல் ஆய்வாளர் கௌதம் என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தினர்கள், கூலித்தொழிலாளி வைத்தியலிங்கத்தை மிரட்டுவதாகவும் அவர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதால், அவருடைய அடமான வீட்டு பத்திரத்தை பெற்றுத்தரும்படி புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.