
பெங்களூரில் சீட்டு கம்பெனி நடத்தி 100 கோடி மோசடி: கேரள தம்பதி தலைமறைவு.
பெங்களூருவில் சிட்டி கம்பெனி நடத்தி வந்த கேரள தம்பதி, பல நூறு பேரிடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயுடன் தலைமறைவானதாகப் புகார் எழுந்துள்ளது.
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் ‘ஏ & ஏ சிட் ஃபண்ட் அண்ட் ஃபைனான்ஸ்’ என்ற நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், ராமன்கரியைச் சேர்ந்த ஏ.வி. டோமி மற்றும் அவரது மனைவி ஷைனி டோமி ஆகியோர் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும், பல கோடி ரூபாயுடன் தலைமறைவானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இருவரையும் காணவில்லை என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது வீடு மற்றும் வாகனத்தை விற்றுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவரின் தொலைபேசிகளும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் அலுவலகத்தில் சில ஊழியர்கள் இருந்தாலும், உரிமையாளர்கள் எங்கே சென்றார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்தே முதலீட்டாளர்கள் காவல்துறையை அணுகியுள்ளனர்.
ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரே முதன்முதலில் புகார் அளித்துள்ளார். தனக்கும் தனது மனைவிக்கும் ஓய்வூதியப் பலனாகக் கிடைத்த தொகை மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கிய தொகை உட்பட மொத்தம் 70 லட்சம் ரூபாயை இந்த சீட்டு கம்பெனியில் முதலீடு செய்திருந்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பணத்துடன்தான் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, மேலும் பல முதலீட்டாளர்கள் காவல் நிலையத்திற்கு வரத் தொடங்கினர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை 265 பேர் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ₹100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தம்பதி, பெங்களூரில் உள்ள ஒவ்வொரு அமைப்புடனும், சங்கங்களுடனும், நல்லுறவைப் பேணி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றதால், இவர்களது சீட்டு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் அதிகம்பேர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.