
முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பா.ஜ.க பிரமுகரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு.
முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய, தேனி மாவட்டம் கம்பம் பாஜக முன்னாள் நகர தலைவரை தாக்கி செல்போன்,பணம் மருத்துவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் திருமால் (45), இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கம்பம் நகர தலைவராக இருந்தவர். நேற்றைய தினம் திருமால் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். இரவு சுமார் ஒரு மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தை கம்பம் அரசமரம் அருகே இருந்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வேலப்பர் கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வேலப்பர் கோவில் அருகே இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்து தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போன், அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் திருமால் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் காயமடைந்த திருமால் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு காவல் நிலையத்தில் யாரும் இல்லாமல் காவல் நிலையம் பூட்டிக் கிடந்ததாகவும், பின்னர் அங்கிருந்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சையில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து காயமடைந்த திருமால் அளித்த புகாரியின் பேரில் கம்பம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவினை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கம்பம் நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பழனிக்குமார் கூறுகையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பிய முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் திருமால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது. தாக்குதலுக்கு உள்ளான திருமாலுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும், மர்ம நபர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.தொடர்ந்து கம்பம் நகரில் இரவு நேரங்களில் காவல்துறையினர் இது போன்ற சமூக விரோத செயல்களை தடுத்திட ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் நகர தலைவர் திருமால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாங்கள் அடுத்த கட்டமாக போராட தயாராக உள்ளோம் என்றும் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.