
தேனியில் உயர் கல்வி பயில்வதற்கான "கல்லூரிக் கனவு" வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்று சிறப்புரை
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த (14.05.2025) சென்னையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனிமாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வி பயில்வதற்கான “கல்லூரிக் கனவு” வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பள்ளியில் படிக்கும்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக கடின முயற்சியோடும் மிகுந்த கவனத்தோடும் படித்திருப்பீர்கள். அதேபோல் உயர்கல்விக்கும் மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும்.
அரசுப்பள்ளி, தனியார்பள்ளி என எங்கு படித்தோம் என்பதைவிட எப்படி படித்தோம் என்பதே முக்கியமானதாகும். நானும் அரசுப்பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் படித்துதான் இந்நிலையை அடைந்துள்ளேன். கல்வி அனைவரையும் சமமாக்குகிறது.
உயர்கல்வியில் மருத்துவ பிரிவு மற்றும் பொறியாளர் பிரிவை தவிர ஏராளமான பிரிவுகள் உள்ளது. எதிர்கால தேவையை உணர்ந்து, அதற்கேற்ற பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும். உயர்கல்வி தொடர்பாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சார்பாக அமைக்கப்பட்டு உயர்கல்வி குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி மாணவி பவித்ரா தெரிவித்ததாவது; நான் பாலகோம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் உயிரி-
அறிவியல் பாடப்பிரிவில் பயின்றேன். பொறியியல் பிரிவில் சேர்ந்து பயில வேண்டும் என்பதே எனது ஆசை. இந்நிலையில் எங்கள் பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் JEE தேர்வு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். இதில் நான் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, Advance தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை IIT -இல் படித்து வருகின்றேன். கல்லூரி என்பது கனவல்ல அது நிஜம் என்ற பெரிய இலக்கையே அடைய வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இதுபோன்ற வாய்ப்புகளை நீங்களும் முறையாக பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படிக்கலாம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன், உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலசந்த்ரா, உதவி வன அலுவலர் அரவிந்த், முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நேரு, வட்டாட்சியர் மருதுபாண்டி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர்
கலந்து கொண்டனர்.






