
முருகன் கோயில் குடமுழுக்கு விழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே 100 ஆண்டுகள் பழமையான கரை முருகன் கோவிலில் 14ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கரைமுருகன் திருக்கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, நேற்று கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்ட பின் யாகத்தில் வைத்து உருவேற்றப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து, மூலவராக வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் கரை முருகன் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் , இ.புதுப்பட்டி, இடையபட்டி, தொட்டப்பநாயக்கணூர், திடீர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விழா கமிட்டியினர் சார்பில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.