April 19, 2025
கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மதுரை பெருங்குடி காவல் நிலைய தலைமைக் காவலர் சித்தையன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் .

ஏற்கனவே, கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக மாடுபிடி வீரர்கள் காளை உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாலை 4 மணி அளவில் ஜல்லிக்கட்டு கமிட்டியின் டோக்கன் இருப்பதாக கூறி ஜல்லிக்கட்டு காளைகளை குறுக்கு வழிகளில் வாடி வாசலுக்கு கொண்டு வந்தனர் இந்த நிலையில் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் வாசல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் சித்தையன் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்னால் வந்த ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜல்லிக்கட்டு அரங்கத்திற்குள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியானது பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக டோக்கன் இல்லாத பலர் ஜல்லிக்கட்டு காளைகளை குறுக்கு வழியில் வாடி வாசலுக்கு கொண்டு செல்லும் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.