
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் குளறுபடிகளால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை
பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக காளை உரிமையாளர்கள் பரபரப்பு புகார் :
சோழவந்தான்:
தமிழகத்தின்வீர விளையாட்டு களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி வருடம் தோறும் தை மாதம் நடைபெறும் மதுரை அவனியாபுரம் பாலமேடு உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளால் தமிழகத்தின் வீரம் உலகமெங்கும் பறைசாற்றி வருவது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதலில் ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜல்லிக்கட்டில்
ஈடுபாடு உள்ளவர்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக, மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சுமார் 100 கோடி செலவில் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் எனும் பெயரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதலில், பொதுவான ஜல்லிக்கட்டு போட்டியாக தொடங்கிய இந்த போட்டியானது அடுத்ததாக மதுரை கிழக்கு தொகுதி சார்பில் இரண்டு நாட்களும் சோழவந்தான் தொகுதி சார்பில் ஒருநாளும் மதுரை மேற்கு தொகுதி சார்பில் ஒரு நாளும் மேலூர் தொகுதி சார்பில் ஒரு நாளும் திருச்சி தொகுதி சார்பில் ஒருநாளும் என ஆறு நாட்கள் நடைபெற்ற நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் சார்பில்,
ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது.
ஒவ்வொரு வாரமும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் உச்சகட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது பாதியிலேயே நிற்கும் அளவிற்கு சென்றது மிகவும் வேதனைக்குரியதாக கூறப்படுகிறது.
முக்கியமாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளை உரிமையாளர்கள் சுமார் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து நேற்று இரவு முதல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் தங்கள் காளைகளை அவிழ்த்து விட காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வெளி மாவட்டம் பெயரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என அறிவிப்பு வெளியிட்டு உள்ளூர் காளைகளை திமுகவினர் அவிழ்த்து விடுவதும் முதலில் டோக்கன் பெற்ற காளைகள் அவிழ்க்க முடியாமல் திரும்பிச் செல்வதுமாக தொடர்ச்சியான அரங்கேறி வரும் சம்பவமாக கருதப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி பகுதிகளில் இருந்து போதிய போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யாத நிலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அரசு அதிகாரிகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக, காவல் துறையினர் மருத்துவத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறையினர் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க முடியாமல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் காத்துக் கிடப்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மூன்று மணி அளவில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்படாமல் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். குறிப்பாக , புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய தொலைதூர மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு முதலே வந்திருந்த காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளை வாடிவாசல் வழியாக அவிழ்க்க முடியாமல் வேதனையுடன் திரும்பிச் சென்றது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், முழுக்க முழுக்க திமுகவினரின் ஜல்லிக்கட்டாகவே இது நடத்தப்படுகிறது பெயருக்கு வெளி மாவட்ட காளைகளுக்கு டோக்கனை வழங்கிவிட்டு உள்ளூர் திமுகவினர் ஆதரவுடன் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு டோக்கன் கொடுப்பதால் அரசு அதிகாரிகள் மூலம் இடையில் காளைகளை அவிழ்த்து விடும் நிகழ்வு வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ஆயிரம் காளைகள் அவிழ்க்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் 700 காளைகள் மட்டுமே அவிழ்த்து விட்டதாக கூறுகிறது . இது குறித்து காளை உரிமையாளர்கள் கூறுகையில், 700 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகம் கூறுவது முற்றிலும் தவறான தகவல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் முதலில் டோக்கன் வழங்கிய சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்படாமல் வரிசையில் நின்றிருந்தது. மேலும் , இதற்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று 1000க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் ஏன் 700 காளைகள் அழிக்கப்பட்டது என்ற காரணமும் மாவட்ட நிர்வாகத்தால் கூறப்படவில்லை.
ஒருவேளை அமைச்சரின் தொகுதியான கிழக்கு தொகுதிக்கும், சோழவந்தான் எம் எல் ஏ வின் தொகுதியான சோழவந்தான் தொகுதிக்கும் ,அமைச்சர் புதிதாக பொறுப்
பேற்றுள்ள மதுரை மேற்கு தொகுதிக்கும் அமைச்சர் மாவட்டச் செயலாளராக உள்ள மேலூர் தொகுதிக்கும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயிரம் காளைகளுக்கு மேல் அவிழ்த்து விடப்பட்ட அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் ஏன் 700 காளைகளை அவிழ்க்க முன் வந்தார் என்ற காரணமும் எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
ஆகையால், இன்று 700 காளைகள் என்பது பொய்யான தகவலாகவே பார்க்கப்படுகிறது.
வெளி மாவட்ட காளைகள் 500க்கும் குறைவாகவே அவிழ்க்கப்பட்டது. மீதி 500 காளைகள் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திமுகவின் காளைகள் அவிழ்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. ஆகையால், முறைகேடாக நடைபெறும் ஜல்லிக்கட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேரடியாக டோக்கன்கள் வழங்கி ஜல்லிக்கட்டு நேர்மையாக நடத்த வேண்டும் இல்லை என்றால் இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் சார்பாக கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்று கூறினார் .
மேலும் ,அவர்கள் கூறுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரை சூட்டி விட்டு திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது என்று தெரிவித்தனர். ஆகையால் ,
இனிவரும் காலங்களிலாவது ஜல்லிக்கட்டு போட்டிகளின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுத்தவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்திலும் ஜல்லிக்கட்டு நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.