
ஆலங்குளம் அருகே பீடி சுற்றும் பெண்கள் முற்றுகை போராட்டம்.
ஆலங்குளம் அருகே பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு 4 வாரங்களாக ஊதியம் வழங்காதது மற்றும் ஊதியத்திலிருந்து 10 சதம் பிடித்தம் செய்தும் 10 சதம் வைப்பு நிதி (பிடித்தம்) பணம் வழங்காமல் இருப்பதை கண்டித்து தனியார் பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கண்டப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பீடிக்கடைக்கு அப்பகுதியை சேர்ந்த சுமார் 130 பெண்கள் பீடி சுற்றி கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர்.இவர்கள் சுற்றும் பீடிக்கு இக்கடை வாரந்தோறும் சனிக்கிழமை ஊதியம் வழங்கப்பட்டு வந்துருக்கிறது,என தெரியவருகிறது.தற்போது இந்த பீடி தொழிலாளிகளுக்கு கடந்த 4 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.மேலும் கடந்த மூன்று வருடங்களாக வருங்கால வைப்பு நிதிக்கு தொழிலாளிகளின் ஊதியத்திலிருந்து 10% பிடித்தம் செய்தும்,பீடி நிறுவனம் 10% பணம் அளிக்காமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து பீடி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதில் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.இப்பிரச்சனைக்கு தீர்வு கோரி சுமார் 50 க்கும் மேற்பட்ட பீடி சுற்றும் பெண்கள் பீடிக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் விரைந்து வந்து பீடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது இந்த வாரம் முதல் ஊதியம் வழங்கப்படும், வருங்கால வைப்பு நிதிக்கும் உரிய தீர்வு எட்டப்படும் எனக்கூறியதன் பேரில் தொழிலாளிகள் கலைந்து சென்றனர்.