
காரியாபட்டி, |மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 76 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம். அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர், காரியாபட்டி, மல்லாங் கிணர் பேரூராட்சி களுக்கான 76 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர் மாவட்டம், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.75.85 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மல்லாங் கிணர் கலைஞர் திடலில் நடை பெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்., வருவாய்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் , நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் உள்ளூர் நீராதாரத்தின் வாயிலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 1.75 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு 1.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தார்.
அதன் அடிப்படையில், வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் நீங்கலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 2.38 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு 1.84 மில்லியன் லிட்டர் என, கணக்கிட்டு அப்பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 29.10.2024 நாளிட்ட அரசு அரசாணை வாயிலாக ரூ.75.85 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவைப்படும் குடிநீரினை வைகை ஆற்றில் 11 நீர் உறுஞ்சு கிணறுகளிலிருந்து 3.96 கிலோ மீட்டர் நீளம், 100 எம்.எம் விட்டமுள்ள இரும்பு குழாய்கள் வழியாக 9.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்பு 2.38 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள 1.80 இலட்சம் லிட்டர் மேல் சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு உந்தப்பட்டு அங்கிருந்து 58.61 கிலோ மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய் மற்றும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் தன்னோட்ட குழாய்கள் ( மூலம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு முறையே 80 ஆயிரம் மற்றும் 1.00 இலட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்படவுள்ளது.
அங்கிருந்து குடிநீர் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் குழாய் 13.79 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் 13.98 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் உந்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படள்ளது.
இத்திட்டம் நிறைவுறும் போது இவ்விரு பேரூராட்சிகளிலும் உள்ள 36,200 மக்கள் பயன்பெறுவார்கள்.
விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க, ஸ்டாலின் தலைமையிலான அரசு, நகராட்சி நிர்வாகத்துறைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தது தி.முக ஆட்சியில் தான். பேரூராட்சிகளுக்கு அதிகமான நிதிகளை ஒதுக்கி , சாலை, வசதி குடிநீர், தெரு விளக்கு, அம்ருத் திட்டத்தில் குடிநீர் விஸ்தரிப்பு வசதி,, கழிவுநீர் வசதி, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுமே அனைத்து பேரூராட்சிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என்பது ஒரு காலத்திலே ஆழ்குழாய் போட்டு குடிநீர் வழங்கப்படும் பணியை மேற்கொண்டது. அதற்கு பிறகு உள்ளூரில் உள்ள தண்ணீர் குறைந்து விட்ட காரணத்தினால் ஆறுகளிலே கிணறு வெட்டி கிணறுகளின் மூலமாக கூட்டு குடிநீர் திட்டத்தை கொடுக்கின்ற திட்டத்தை உருவாக்கினோம்.
கலைஞர் ஆட்சியில் தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கினார்கள். தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுபேற்பதற்கு முன்னால் வரை, தமிழ்நாட்டில் சுமார் 4.26 கோடி மக்களுக்குத்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தரப்பட்டது. தற்போது கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மூலம் கூடுதலாக 3 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி. மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், வேலூர், கடலூர். திருப்பத்தூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை ஈரோடு. சேலம், கரூர், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சார்ந்த 4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 43 பேரூராட்சிகள் மற்றும் 9,940 ஊரக குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 759.73 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 120 இலட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.
பாதாள சாக்கடைத் திட்டங்களில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த 3 மாநகராட்சிகள், 8 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளில் 17 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ.1.777.42 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 160.19 மில்லியன் லிட்டர்
கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.75 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.
குடிநீர் திட்டங்களில் திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த 15 நகராட்சிகள், 37 பேரூராட்சிகள் மற்றும் 13,565 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.17,452.72 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 766.08 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீரை 115.09 இலட்சம் மக்களுக்கு வழங்கும் வகையில் 25 குடிநீர் திட்டங்கள் பல்வேறு நிதி ஆதாரங்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்றும் பொருட்டு, தூத்துக்குடி, விருதுநகர். விழுப்புரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சார்ந்த 3 மாநகராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளில் உள்ள 16.13 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 10 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ. 3,608.35 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 161.50 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
மறுசீரமைப்பு திட்டங்களில் ரூ.1658.35 கோடி மதிப்பீட்டில், 56 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 52 மறுசீரமைப்பு பணிகள் முடிவுற்று மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மேற்படி திட்டங்களில் கூடுதலாக 73.54 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 60 சதவிகிதம் மக்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதிக நிதிகளை வழங்கி திட்ட பணிகளை மேற்கொள்வதால் தான், இந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள 25 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடிகிறது.
நகராட்சிகளை பொறுத்தவரையில் சாலைகள், பாதாள சாக்கடைகள், புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வளர்ச்சிகளில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அனைவருக்கும் உரிய குடிநீர் தர வேண்டும். சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நல்ல மின்சார வசதிகளை தர வேண்டும். மழைநீர் சேமிப்பு வசதிகளை தர வேண்டும். இந்த பணிகளை செய்வதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அதிகளவு நிதிகளை தந்து கொண்டிருக்கின்றார் .
எனவே, குடிநீராக இருந்தாலும், சாலைகள், பாதாளச்சாக்கடை, மழைநீர் சேமிப்பு, உள்ளிட்ட வசதிகளாக இருந்தாலும், பொது மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என, தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேசும் போது:
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் ஏறத்தாழ சுமார் 35 ஆயிரம் பேர் இருக்கக்கூடிய இந்த பேரூராட்சியில், ஏற்கனவே இருக்கக்கூடிய நமது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமாக நிறைவேற்றக்கூடிய அந்த பணியின் மூலமாக கிடைக்கக்கூடிய குடிநீரின் அளவு மிகக்குறைவாக இருக்கிறது. ரூபாய் 75 கோடி மதிப்பீட்டில் இரண்டு பேரூராட்சிகளுக்கும் ஒரு தனி கூட்டுக்குடிநீர் திட்டத்தை உருவாக்கி நமக்கு நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.
இந்த மக்களுக்கு ஒரு காலத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. ஒரு காலத்தில் இராமநாதபுரத்தில் இருந்து நமது மாவட்டம் பிரிந்தது. இன்று இராமநாதபுரத்தை நோக்கி காவிரி பாய்கிறது. இராமநாதபுரத்தில் இருந்து ஒரு பகுதியாக இருக்கக்கூடிய இந்த விருதுநகர் மாவட்டத்தை நோக்கி தாமிரபரணி பாய்கிறது; எனவே, வடக்கில் இருந்து ஒரு நதி, தெற்கிலிருந்து ஒரு நதி, அந்த நதியும் உங்களுடைய தாய் வீட்டு நதி. காவேரி நிதி பாயக்கூடிய நீரிலிருந்து வரக்கூடிய நீங்கள் எங்களுக்கு தண்ணீர் தருகிறீர்கள். காவேரியிலிருந்து வரக்கூடிய நீர் நாளை புல்லாற்றில் கடக்கக்கூடிய நீராக வருகின்ற போது, எங்கள் பாசனத்திற்கும் சரி, குடிநீருக்கும் சரி திருச்சி மாவட்டம் தான் எங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த திட்டம் நிறைவேறும் போது ஏறத்தாழ 42 எம்.எம்.டி நமக்கு கிடைக்கும் என்றால் நமது வரலாற்றிலே நமது இரண்டு பேரூராட்சி மட்டும் குடிநீர் தேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.
நம் முதலமைச்சர் நம்முடைய தொகுதிக்கு நிறைவேற்றிக்கக்கூடிய திட்டங்கள் மிகவும் ஏராளமானது.
அதில் நமக்கு குடிப்பதற்கு. நல்ல குடிநீர் வழங்கக்கூடிய திட்டத்தையும் வழங்கி இருக்கிறார். எனவே, . தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பாக வும் என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் , குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கிரண் குரலா,
எம்.எல் ஏ .சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், பேரூராட்சித் தலைவர்கள் செந்தில்(காரியாபட்டி),.துளசிதாஸ்(மல்லங்கிணறு), மேற்பார்வை பொறியாளர்கள் லதா செல்வி, முரளி மனோகர், கென்னடி, நிர்வாக பொறியாளர் .செந்தில் குமார் , காரியாபட்டி தி.முக ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் , செல்லம் , மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.