
நீதித்துறையின் கறுப்பு நாள்
சென்னை உயர்நீதிமன்றத்திற்குள், 2009-ம் வருடம் பிப்ரவரி 19-ம் தேதி ஆயிரக்கணக்கில் போலீசார் வெறிபிடித்த காட்டுமிராண்டிகளைப் போல, நீதிமன்ற வேளையில் நுழைந்தார்கள். ஏதுமறியாத ஆண் பெண் வழக்கறிஞர்களை கொடூரமாகத் தாக்கினார்கள். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களின் மண்டைகள் உடைக்கப்பட்டது.
கை கால்கள் எலும்புகளை அடித்து நொறுக்கினார்கள். வெள்ளைச்சட்டை போட்டிருந்த எல்லா வழக்காடிகளையும் கடுமையாகத் தாக்கினார்கள். நீதிமன்ற ஆண் பெண் ஊழியர்களைத் தாக்கினார்கள். நீதிமன்றங்களுக்குள் புகுந்து நீதிமன்ற அறைகளை அடித்து நொறுக்கினார்கள். வழக்கறிஞர் சங்கங்களை துவம்சம் செய்தார்கள்.
பெண் நீதிபதிகள் உட்பட பல நீதிபதிகளையும் அடித்து அசிங்கப்படுத்தி துரத்தினார்கள். நீதிமன்ற வளாகத்திலும் வெளியிலும் இருந்த எல்லா இருசக்கர வாகனங்களையும் நூற்றுக்கணக்கான கார்களையும் உடைத்தார்கள்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்நிலையம் தீவைத்து கொளுத்தப்பட்டது. பணியிலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதியின் மண்டையை உடைத்தார்கள். தாக்குதலை நிறுத்த அவர் விடுத்த வேண்டுகோள்களை கண்டுகொள்ளாமல் வெறியாட்டம் போட்டார்கள். உயர்நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள தெருக்களிலும் வழக்கறிஞர் அலுவலகங்களிலும் புகுந்து சூறையாடினர்.
யாரைக்கண்டாலும் அடித்து அனைத்தையும் உடைத்து நாசம் செய்தார்கள்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத மிகப்பெரும் அராஜகத்தை நிறைவேற்றி உயர்நீதிமன்றத்தை பல நாட்கள் முடக்கினார்கள். அந்த இழிசெயல் நடந்து இன்றோடு பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஆனால், இந்த அக்கிரமங்களுக்கு காரணமான ஒருவர் மீது கூட உருப்படியான நடவடிக்கைகள் இல்லை.
நீதிபதிகள் அதை மறந்தே விட்டார்கள் போல. வழக்கறிஞர்களும் போதிய அக்கறை காட்டாமல் இருந்து கொண்டு வருடாவருடம் பிப்ரவரி 19-ஐ கறுப்பு நாளாக அறிவிப்பது மட்டும் போதுமென நினைக்காமல், இவ்விஷயத்தில் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு எது குறுக்கே நிற்கிறது என்பதை அடையாளம் கண்டுகொண்டு, நீதிக்கான போராட்டத்தை இனிமேலாவது அறிவுபூர்வமாக துவங்க வேண்டும். சென்னை வழக்கறிஞர் பெருமக்களுக்கு அதில் பெரும்பங்கு இருக்கிறது.
தேர்தல்களில் காட்டுகிற அதீத அக்கறையில் நூறில் ஒரு பங்கையாவது இவ்விஷயத்தில் வழக்கறிஞர்கள் காட்டவேண்டும். காட்டுவார்களா..?
தெ.அம்பேத்கர் பிரசாந்த் வழக்கறிஞர் மாநில இளைஞரணி தலைவர் ஏப்ரல் 14 இயக்கம்