July 28, 2025
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 % தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 % தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

தேனி மாவட்டம், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் வா.சம்பத் முன்னிலையில் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), கே.எஸ்.சரவணக்குமார்(பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் (மதுரை) க.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு இணையாக கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 % தேர்ச்சி பெற செய்து சிறப்பான இடத்தை பெற செய்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்க பாராட்டுகளை தெரிவித்தார்.

சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள்தான் அடித்தளமாக உள்ளனர். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப ஆரம்பத்தில் நாம் கற்கும் கல்விதான் கடைசிவரை துணை நிற்கும். திருவள்ளுவர் கூற்றுப்படி யாராலும் அழிக்க முடியாத செல்வம் கல்வி ஒன்றுதான்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு காரணம் ஆசிரியர்கள் என்றார்.பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்து தரப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 1920-இல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. 1969-இல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இப்பள்ளிகள் இயங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி 1989-இல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 295 அரசு கள்ளர் சீரமைப்பு
பள்ளிகள் 4 உண்டு உறைவிடப்பள்ளிகள் 55 விடுதிகள் இத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். மதுரை, தேனி, திண்டுக்கல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96% தேர்ச்சியும்,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% தேர்ச்சியும் பெற்றிருப்பதை 100% உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 10 மற்றும் 12–ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை பெற்று பிற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்றார்.

மேலும், ரூ.4.68 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறை வசதிகளும், ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் இரண்டு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி தற்பொழுது பெறப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு மட்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே பள்ளி கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளும், சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 100% தேர்ச்சி என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற வள்ளுவரின் கூற்றுப்படி, மாணவர்களை 100% தேர்ச்சி பெற செய்து பெருமகிழ்ச்சியில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மதுரை மண்டலத்திற்குட்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 2023-2024 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 95% க்கு மேல் தேர்ச்சி பெற்ற 58 பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு தலா ரூ.10,000/- பரிசுத்தொகையும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவ, மாணவியர்களை 100% தேர்ச்சி பெறச் செய்த 587 பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலா ரூ.5000/- பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் 100% தேர்ச்சி பெறச்செய்த 29 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், திட்டக்குழு உறுப்பினர் நாராயணபாண்டி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், துணை இயக்குநர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்) ரமணகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாச்சலம், முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.