April 20, 2026
மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: மடத்துக்குளம் பிரச்சாரத்தில் சண்முகவேலு உறுதி

மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: மடத்துக்குளம் பிரச்சாரத்தில் சண்முகவேலு உறுதி

மடத்துக்குளம்:
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமமுக வேட்பாளர் சண்முகவேலு உறுதியளித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சண்முகவேலு, திருமூர்த்திமலை பகுதியில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தனது ‘குக்கர்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவர், அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமங்களில் அவர் பேசியதாவது: நான் மடத்துக்குளம் எம்.எல்.ஏ-வாக பணியாற்றிய காலத்தில், மலைவாழ் மக்களுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ முகாம்களை நடத்தினேன். அதேபோல், மீண்டும் வெற்றி பெற்றவுடன் தங்குதடையின்றி மருத்துவச் சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பட்டா மற்றும் வீடுகள்: வீடற்ற மலைவாழ் மக்களின் பட்டியல் முறையாகச் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்குப் பட்டா வழங்குவதோடு, புதிய வீடுகள் கட்டித் தரப்படும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் நிலவும் குடிநீர் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு, கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.

சிறப்பு முகாம்கள்: அரசின் நலத்திட்டங்கள் மக்களைத் தேடி வரும் வகையில், குடியிருப்புப் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அமராவதி அணையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்களுக்காகப் புதிய சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சேரன் நகர், தாந்தோணி, பாப்பான்குளம் ஆகிய பகுதிகளிலும் வேட்பாளர் சண்முகவேலு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *