
வாடிப்பட்டி அருகே கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு..
வாடிப்பட்டி, நவ.22.
மதுரை, வாடிப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் , தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் கரவை செய்த பாலை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பாலின் தரம் குறித்து அங்கிருந்த பால் தர பரிசோதனை கருவி மூலம் தரம் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.
அப்போது, விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் மனோதங்கராஜ் இந்த கருவி மூலம் பாலின் தரம் நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு உங்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறதா என கேட்டார்.
அதற்கு விவசாயிகள் கடந்த இரண்டு தினங்களாக தான் வழங்குவதாக தெரிவித்தனர். அப்போது அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் மனோதங்கராஜ், விவசாயிகள் கொண்டுவரும் பாலின் தரத்திற்கு ஏற்ப அவர்களுக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டு வழங்கி உரிய விலை வழங்க வேண்டும் என கூறினார்.
மேலும், விவசாயிகளிடம் நீங்கள் கொண்டுவரும் பாலின் தரம் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் மூலம் நீங்கள் ஏமாறாமல் இருக்கலாம், எனவே,
இனி நாள்தோறும் இந்த தர கட்டுப்பாட்டு கருவியில் உங்கள் பாலின் தரத்தை ஆய்வு செய்து அதற்குரிய ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் அதில் உங்கள் பாலுக்கு ஒரு லிட்டருக்கு எவ்வளவு கொள்முதல் விலை வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடப்படும்.
அதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கூறினார்., அதனைத்தொடர்ந்து, குலசேகரன்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகளின் மாட்டுப் பண்ணைக்கு நேரடியாக சென்ற அமைச்சர் அங்கு அவர்களுடன் கலந்துரையாடி அரசின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அப்போது, ஆய்வின் போது பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தற்போது மதுரை ஆவின் செயல்பாடு லாபத்தை நோக்கி செல்வதால் ஏற்கனவே கடந்த தீபாவளியன்று சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தற்போது அவர்கள் பொங்கல் பண்டிகைக்கும் ஊக்கத் தொகை வேண்டும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர், அதையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பால்வளத்துறை கூடுதல் ஆணையர் பிரமிளா, ஆவின் பொது மேலாளர் சிவகாமி, துணை பொது மேலாளர் முகமது ரபிக், உதவி பொது மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.






