
கொடைக்கானல் அருகே வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து பழனி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி : நவம்பர், 21
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி அருகே உள்ள பட்டியக்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(27). பழங்குடியினத்தை சேர்ந்த பாண்டியன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு சித்ரா(24) என்ற மனைவியும், ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற பாண்டியன் மதியம் 1 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று பாண்டியன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த பாண்டியனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார். இந்நிலையில் பாண்டியன் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் வழங்க முயன்ற போது பாண்டியனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாண்டியன் மீது டிராக்டரை ஓட்டி வந்து மோதிய வாகன ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என்றும், பாண்டியனின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், உருவலான சாலை காரணமாக விபத்து நடந்துள்ளதாகவும் எனவே மலை கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டியனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நடந்த திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி நிருபர் : நா.ராஜாமணி.






