
58 கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
உசிலம்பட்டி:
விவசாயிகளின் தொடர் போராட்டங்கள், கோரிக்கையின் எதிரொலியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் வைகை அணையிலிருந்து உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் கனவு திட்டமாக உள்ளது 58 கிராம பாசன கால்வாய் திட்டம்., திட்டத்தின் கட்டமைப்பு பணிக்காக போராட்டம், தண்ணீர் திறக்க போராட்டம் என தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தண்ணீரை தற்போது வரை சோதனை அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் பெற்று வரும் சூழலில்., வைகை அணையில் உள்ள மதகு பகுதியை குறைந்து, நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை கோரி விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சோதனை அடிப்படையில் திறக்கப்பட்ட நீரினால் உசிலம்பட்டி பகுதியின் பெரும்பாலான பகுதிகள் விவசாயத்திற்கு மட்டுமன்றி குடிநீர், கால்நடை வளர்ப்புக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக மாறியது.
இதன்படி, ஆண்டு தோறும் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் மட்டுமல்லாது சாமானிய மக்களும் முன் வைத்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டும், கடந்த தென்மேற்கு பருவமழை காலத்திலும் போதிய மழை பொழிவு, நீர் பற்றாக்குறை காரணமாக வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு முதல் தண்ணீர் திறக்க கோரி கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த சூழலில், தற்போது வடகிழக்கு பருவமழையால் வைகை அணை நிரம்பி போதிய நீர் இருப்பு உள்ளதால் தண்ணீரை திறக்க மீண்டும் கோரிக்கை வைப்பதுடன் எப்படியும் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையோடு தாமாக முன்வந்து 58 கால்வாய் மூலம் பயன்பெரும் 33 கண்மாய்களுக்கு செல்லும் கிளை கால்வாய்களை அந்த அந்த கிராம மக்களே தன்னெழுச்சியாக தூர்வாரி வந்தனர்.
இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு நாளை 29.10.2025 முதல் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடி விதம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய்க்கு தண்ணீர் விட உத்தரவிட்டது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ,
நிரந்தரமாக தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.






