March 2, 2026
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச்சு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச்சு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச முற்பட்டு உ‌ள்ளா‌ர் ஒரு மூத்த வழக்கறிஞர்.

இது இந்திய நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம்.

வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்து உள்ளது. காரணம் என்ன?

சமீப காலமாக இந்திய நீதித்துறைமீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

காரணம் பலவாக உள்ளது.

அண்மையில் டெல்லியில் ஒரு நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பிடி பட்டது. சம்பந்தப்பட்ட நீதிபதி, பணத்தை வெளியில் இருந்து யாரோ வந்து வைத்து சென்று உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

நீதிபதி வீட்டு கேட் எப்போதும் காவல் கண்காணிப்பில் இருக்கும்போது, எப்படி வெளியில் உள்ளவர்கள் பணத்தை அங்கே வைத்து பரிமாற முடியும்?

அத்துடன் அவர் நிற்கவில்லை. என் மீது நடவடிக்கை எடுத்தால் எல்லோரையும் காட்டி கொடுத்து விடுவேன் என்ற பாணியில் பேசி வந்தார்.

கலீஜியம் (collegium) முறையில் நீதிபதி லஞ்சம் வாங்கினாலும் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் எந்த இடத்தையும் எவர் இடத்தையும் வக்ஃப் வாரியச் சொத்தாக அறிவிக்கலாம்,

வக்ப் ட்ரைபூனல் முடிவு தான் இறுதியானது. அதை எதிர்த்து நீதி மன்றம் கூட செல்ல முடியாது எனக் காங்கிரஸ் அரசு 2013 ல் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக 64 வழக்குகள் பதிவாகியும், அதில் ஒன்றைக் கூட ஏற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்காத நீதிமன்றம்…

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் பதிவான 22 வழக்குகளையும் உடனே எடுத்துக் கொண்டு உடனே விசாரணையைத் தொடங்கியது நீதியா? நியாயமா? என்ற கேள்வி எழுந்தது.

மதத்துக்கு ஒரு நீதி என்று பாரபட்சம் காட்டுகிறதா நீதி மன்றங்கள்?

அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒரு மத நிர்வாகத்தில் பிற மதத்தவர் இருக்ககூடாது என்று எங்காவது சொல்லப்பட்டு உள்ளதா?

உள்ளது என்றால் இந்து அறநிலைய துறை நிர்வாகத்தில் பிற மதத்தவரை பணி அமர்த்த கூடாது என்று தொடர்ந்த வழக்கில், சமயச் சார்பற்ற நாட்டில் இப்படிப்பட்ட வழக்குகளை ஏற்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் ஏன் சொன்னது?

அந்த தீர்ப்பு இப்போது உச்ச நீதி மன்றம் முன் உள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு பொருந்தாதா,

வக்ப் போர்டில் இந்துக்கள் இடம் பெறக்கூடாதா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு சட்டத்துக்கு குடியரசு தலைவர் குறித்த காலத்தில் ஒப்புதல் அளிக்க மறுத்தால் சட்டம் ஆகி விடும் என்று நீதிமன்றம் முடிவு செய்ய முடியுமா?

குறிபிட்ட காலத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வில்லை என்றால் அது சட்டம் ஆகி விடும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கேயும் இ‌ல்லை.

அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

இரண்டு நீதிபதிக்கு அல்ல.

தமிழக பல்கலை துணை வேந்தர் நியமன வழக்கில் இரண்டு நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்பட்டு உள்ளதாக அப்போது இருந்த குடியரசு துணை தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தை பொறுத்த வரை, உத்தேசமாக எல்லா வழக்குகளிலும், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, தங்களுக்கு சாதகமான தீர்ப்பும் பெற்று வருகிறார்கள்.

இது எப்படி நடக்கிறது? உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் முறையாக விசாரித்து நீதி வழங்க வில்லையா?

அல்லது ஒரு நாள் வாதத்துக்கு 25 லட்சம் அளவுக்கு சம்பளம் பெறும் கபில் சிபல் போன்ற வழக்கறிஞர்களின் வாதத் திறமையா? அல்லது வேறு எதாவது காரணமா என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்து உள்ளது.

தமிழக பல்கலை துணை வேந்தர் நியமன வழக்கில் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இந்த சந்தேகத்தை வலுவடைய செய்து உள்ளது.

தண்டனைகள் குறையும் போது, குற்ற செயல்கள் பெருகுகின்றன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 16ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.

அத்துடன் நிற்கவில்லை. “இப்போது சென்று உங்கள் தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது.

இது உண்மை என்றால், தமிழகத்தில் பொன் முடி அமைச்சராக இருந்த போது பேசிய சைவம், வைணவம் பேச்சுக்கும் இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று கருத இடமுண்டு.

நீதிபதியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்தான் இன்று வழக்கறிஞர் கிஷோர் காலணியை வீசி தன் எதிர்ப்பை தெரிவித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியரசர் பி ஆர் கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பிரதமர் திரு நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நீதிபதி கவாய்யுடன் பேசிய திரு மோடி, தாக்குதலைப் பொருட்படுத்தாது, அவர் அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடித்ததற்குப் பாராட்டு தெரிவித்தார்.

சிலை நிறுவுவது தொடர்பான ஒரு வழக்கில் முடிவை அறிவித்த பின்னர் “இப்போது சென்று உங்கள் தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்”என்று நீதிபதி கூறியது சரியா?

சிலைகள் கடவுள் இல்லை, அது வெறும் கல் என்று கடவுள் மறுப்பு கூட்டம் கூறுவதற்கும் இந்த பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

இந்திய அரசியல் அமைப்பு சட்ட சரத்து 25, அனைத்து குடிமக்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், பயிற்சி செய்வதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரத்தை வழங்குகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நேரடியாக “மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது” என்று கூறவில்லை என்றாலும்,

இந்திய தண்டனை சட்ட சரத்து 295(A) (Section 295A of the Indian Penal Code) எந்த ஒரு வகுப்பினரின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ அவமதிக்கும் நோக்கத்துடன், சொற்களாலோ, எழுத்துக்களாலோ, சைகைகளாலோ அல்லது பிற வழிகளாலோ வேண்டுமென்றே அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறுகிறது.

நீதிபதி கவாய் கூறியதை ஒரு சாதாரண பிரஜை கூறி இருந்தால் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாக அது கருதப் படும்.

ஆனால் இதை பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி கூறி உள்ளார்.

இதன்மூலம் இந்த நாட்டின் 80 சதவீதம் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தி உள்ளார் தலைமை நீதிபதி.

அவர் ஒரு பெரியாரிஸ்டு போல் பேசி இருப்பது வழக்கறிஞர் கிஷோர் மனதை வெகுவாக புண்படுத்தி இருக்க வேண்டும்.

அதனால் அவர் காலணியை வீசி, நீதிபதி காவாயை தாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நிர்வாகமும், நீதி துறையும் நாட்டின் இரு தூண்கள் போன்றவை.

நிர்வாக சீர்கேடு என்றால் நீதித் துறையில் வழக்கு தொடர்ந்து தீர்வு காணலாம்.

நீதித் துறையில் சீர்கேடு என்றால் யாரிடம் முறையிடுவது? அந்த சீர் கேட்டை அவர்களே விசாரிப்பார்கள் என்பது தான் தற்போது உள்ள (collegium) நடைமுறை.

நீதிபதிகள் கடவுளின் பிரதிநிதிகள் என்பதாக மக்கள் பார்க்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் இது போன்ற செருப்பு வீசும் சம்பவம் தொடர்கதை ஆகிவிடும். அப்படி நடந்தால், நாட்டின் ஸ்திர தன்மையை, பாகிஸ்தானில் பாதித்து இருப்பது போல் பாதிக்க ஏதுவாகும்.

சுந்தர்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *