
பழனி அருகே ஆயக்குடியில் 19 ஆம் நூற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டு கண்டுபிடிப்பு.
பழனி அருகே ஆயக்குடியில் கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
பழனி அரசு அருங்காட்சியகமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து பழனி மாலைநேரக் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவ மாணவிகளுக்கு 4 நாள் தொல்லியல்-வரலாறு பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தியது.
இந்தப் பட்டறையின் கடைசி நாள் அன்று ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்தக் கள ஆய்வில் பேராசிரியர் கன்னிமுத்து மற்றும் காப்பாட்சியர் சசிகலா வழிகாட்டுதலில் மாணவ மாணவிகள் ஒரு கல்வெட்டை கண்டறிந்தனர்.
இந்தக் கல்வெட்டு ஆயக்குடி வயல்வெளியில் ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் உள்ளது.கல்வெட்டு 15 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.கலியுக சகாப்தம் 4955 ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் தேதி அன்று சுமைதாங்கி அமைக்கப்பட்டதாக இக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.இதற்கு இணையான ஆங்கிலத் தேதி 24 -01-1855 ஆகும்.
ஆயக்குடியைச் சேர்ந்த பொன்னைய மணியக்காரர் மகன் விசுவநாதமணியக்காரருடைய மனைவி கோதையம்மாள் என்பவர், தெய்வலோக பிராப்தி அடைந்து(இறந்து) விட்டதால் அவர் நினைவாக இச்சுமைதாங்கி அமைக்கப்பட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
பண்டைய நாட்களில் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்கு முன்போ, அல்லது பிரசவ காலத்தில் பிரசவிக்க முடியாமலோ இறந்து விட்டால் அவர்கள் நினைவாக இவ்வாறான சுமைதாங்கிகள் அமைக்கப்படுவது வழக்கமாய் இருந்துள்ளது. சுமை தூக்கி நெடுந்தூரம் செல்லும் வழிப் போக்கர்கள் , தங்கள் தலைச்சுமையை இறக்கி வைத்து இளைப்பாற இவ்வாறான சுமைதாங்கிகள் உதவும் என்பதால், பிள்ளைச் சுமையை இறக்கி வைக்க இயலாமல், கர்ப்பத்தில் இறந்து போனவர்களின் ஆன்மா அமைதி பெறும் என்பது அக்கால நம்பிக்கையாய் இருந்துள்ளது.

தற்காலத்தில் தலைச்சுமை ஏற்றி நெடுந்தூரம் செல்லும் பழக்கம் இல்லாததால் ,இவ்வாறான சுமைதாங்கிகள் அமைக்கப்படுவது வழக்கொழிந்து போய்விட்டது. ஏற்கனவே சென்ற நூற்றாண்டில் பிரசவத்தில் இறந்து போன ஆயக்குடி ஐமீன்தாரின் மனைவி தெய்வானை அம்மாளுக்கு அமைக்கப்பட்ட சுமைதாங்கி கண்டறியப்பட்ட நிலையில், இது இப்பகுதியில் கிடைத்த இரண்டாவது அரியவகை சுமைதாங்கி ஆகும்.






