February 26, 2026
துணைக் கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு !

துணைக் கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு !

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக உள்ள நிலையில், இன்று, தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்கின்றனர்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது.

இந்த குழுவில் தமிழகம் சார்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் பிரியேஷ், மத்திய அரசு சார்பாக இந்திய அறிவியல் ஆராய்ச்ச மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆனந்த ராமசாமி ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவினர் கடந்த மார்ச் 22- ல் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

அன்று நடைபெற்ற மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, மேற்பார்வை குழுவிற்கு உதவியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு, தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் தலைமையில், தமிழக மற்றும் கேரளத்தின் இரண்டு பிரதிநிதிகள் உட்படுத்தி ஐந்து பேர் கொண்ட துணைக் குழு அமைக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய (பேரிடர் மற்றும் மீட்பு பிரிவு) இயக்குனர் ராகுல் குமார் சிங் இரு மாநில முதன்மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார்.

அதன்படி அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையில் துணை குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் தமிழகம் சார்பாக பெரியாறு வைகை வடிநில கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளர் செல்வம், கேரளம் சார்பாக இடுக்கி மாவட்ட நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர்
லிவின்ஸ் பாபு, நீர்ப்பாசன துணை பிரிவு குமுளி உதவி நிர்வாகப் பொறியாளர்
ஷிஜி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக உள்ள நிலையில், இத்துணைக் குழுவினர் இன்று பெரியார் அணையில் ஆய்வு செய்கின்றனர்.

இதற்காக இன்று காலை, துணைக் குழு தலைவர் கிரிதனன் மற்றும் தமிழக அதிகாரிகள் தேக்கடி படகு துறையில் இருந்து தமிழக பொதுப்பணித்துறையினரின் படையில் அணைக்கு கிளம்பிச் சென்றனர். அங்கு அவர்கள் அணை நீர்வரத்து, நீர் கசிவு (சிப்பேஜ் வாட்டர்), மதகுகளின் இயக்கம், மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

கூட்டத்தில் தமிழக அதிகாரிகள், பேபி அணையை பலப்படுத்துவதற்கு உண்டான வழிவகைகள், வள்ளக்கடவு முதல் பெரியாறு அணை வரை உள்ள வாகன பாதையை சீரமைக்கும் பணிக்கு கேரளா அனுமதி தராதது குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.

பின்னர் கூட்டத்தின் தீர்மானங்கள் உயர்நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *