
கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் :
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள், தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான மனுவை நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் திமுக உறுப்பினர் வனிதா நெப்போலியன் நகர் மன்ற தலைவராகவும், மற்றொரு திமுக உறுப்பினர் சுனோதா செல்வக்குமார் துணை தலைவராகவும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நகர்மன்ற தலைவருக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
கடந்த மாதம் நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற பொழுது நகர மன்ற தலைவரை கண்டித்து 18 திமுக உறுப்பினர்களும், 6 அதிமுக உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று திமுக உறுப்பினர்கள் 14 பேர்கள், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக, 16 திமுக உறுப்பினர்கள் கையெழுத்து இட்ட மனுவை நகராட்சி ஆணையாளர் உமா சங்கரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறினர்.
இதை அடுத்து 6 அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களும் இதே போல் மனுவை நகராட்சி ஆணையாளரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, நகராட்சி பொறியாளர் அய்யனார், சுகாதார அலுவலர் அரசகுமார், நகரமைப்பு அலுவலர் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
இதை அடுத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.
உறுப்பினர்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மனு கொடுக்க வருவதை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில், அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க, கம்பம் தெற்கு காவல் நிலைய எஸ்ஐ அல்போன்ஸ் ராஜா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






