
பொது நூலகம் திறப்பு :
சிவகங்கை.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர், தனியார் பங்களிப்புடன் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்திற்கான புதிய கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர் இன்றையதினம் (5.9.2025) சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்திற்கான புதிய கட்டிடத்தினை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில், தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலுள்ள நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு, வாசகர்கள், மாணாக்கர்கள், பொதுமக்கள் ஆகியோர் அதன் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் புகழினை அறிந்து கொள்வதற்கும். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு கலாச்சாரம் ஆகியவைகளை நாம் அறிந்து கொள்வதற்கும் நூல்கள் அடிப்படையாக திகழ்ந்து வருகிறது.
அவ்வாறான பல வகையான நூல்களை பேணி பாதுகாப்பதற்கும், நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையிலும், அவை பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்டு, அனைத்து வகையான நூலகங்கள் புத்துயிர் பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பொருளாதார மேதை என்று அனைவராலும் அழைக்கப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் ப.சிதம்பரம் அவர்கள் மருத்துவம் மற்றும் கல்வி மட்டுமன்றி, நூலகத்திலும் தனி கவனம் செலுத்தி அதனை மேம்படுத்திடும் பொருட்டு, கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில், பெரும் முயற்சி மேற்கொண்டு இங்கு செயல்பட்டு வந்த கிளை நூலகத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, குமுதம் எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்களின் தாயார் லெட்சுமி ஆச்சி நினைவாக குமாராணி டாக்டர்.மீனா முத்தையா அவர்களின் பெரும் பங்களிப்புடன் இக்கிளை நூலகமானது, மேம்படுத்தப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும். முன்னதாக, அண்ணன் ப.சிதம்பரம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் நமது மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.
தற்போது, நூலகத்திலும் தனி கவனம் செலுத்தி, இக்கிளை நூலகத்தினை மேம்படுத்தியது பெருமைக்கும் பாராட்டிற்கும் உரிய ஒன்றாகும். இதில், தனது சார்பில் அளித்துள்ள பங்களிப்பு மட்டுமன்றி, இப்பகுதியை சார்ந்தவர்களின் பங்களிப்பும் இருந்திட வேண்டும் என்பதற்காக இக்கிளை நூலகத்தில் முதல் தளத்தில் வாசகர்களுக்கான அறையை ஏற்படுத்தி தருவதற்கும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் எனது பங்களிப்பும் இருந்திடும் வகையில் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் இந்நூலகத்திற்கு வழங்கப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இக்கிளை நூலகத்தினை மேம்படுத்துவதற்கு இப்பகுதியைச் சார்ந்த ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திடல் அவசியமாகும்.
இந்நூலகமானது, கடந்த 1990ல் பகுதி நேர நூலகமாகவும், 1997ல் ஊர்புற நூலகமாகவும், அதனைத்தொடர்ந்து 1999 முதல் கிளை நூலகமாகவும் செயல்பட்டு, தற்போது ப.சிதம்பரம்
பெரும் முயற்சியால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் இந்நூலகமானது புத்துயிர் பெற்று, புது பொழிவுடன் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் 12,500 ஊரக பகுதிகளில் கிராமப்புற நூலகங்களை உருவாக்கினார்.
அவ்வழியில், செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , நூலகங்கள் நவீன வசதிகளுடன் வடிவமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டு வருகிறது.
நூலகங்களின் தனி அக்கறை கொண்ட அரசாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.
இந்நூலகத்தினை வாசிப்பை நேசிப்பவர்களும், மாணாக்கர்களும், பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் முயற்சியின் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து வகையான நூலகங்களும் புத்துயிர் பெற்று, பொதுமக்கள், புத்தக வாசிப்பாளர்கள், மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கு பயனுள்ள வகையில் திகழ்ந்து வருகிறது.
எனது பங்களிப்புடன் மாவட்டத்தில் கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்து எனது சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மட்டுமன்றி, நூலகங்களை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க குமுதம் எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் தாயார் லெட்சுமி ஆச்சி நினைவாக குமாராணி டாக்டர்.மீனா முத்தையா பெரும் பங்களிப்புடன் இங்கு செயல்பட்டு வந்த கிளை நூலகமானது, நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கிளை நூலகத்திற்கான புதிய கட்டிடத்தினை நான் கோரிக்கை விடுத்ததும் கட்டித்தந்தமைக்காக எனது மனமார்ந்த பாராட்டுக்களை இத்தருணத்தில் அக்குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நூலகத்தில் தற்போது தரைதளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் தளம் ஏற்படுத்துவதற்கென தமிழ் அன்பர்களும், செல்வந்தர்களும் தங்களது பங்களிப்பை அளித்திடல் வேண்டும்.
இதுதவிர, இப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பத்து புத்தகங்களை வாங்கித் தந்து, இக்கிளை நூலக மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும், தனிப்பட்ட முறையில் தனது பங்களிப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, நிதி வழங்குவதாக என்னிடம் தற்போது கூறினார். அமைச்சர் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை இத்தருணத்தில் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இதுபோன்று, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பினை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , நன்கொடையாளர் குமாராணி டாக்டர்.மீனா முத்தையா , கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, மாவட்ட நூலக அலுவலர் (பொ)திருஞானசம்பந்தம், பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா மற்றும் கருப்பையா, கானாடுகாத்தான் நூலகர்கள் சங்கரலிங்கம், செல்வம் மற்றும் வாசக வட்டத்தை சார்ந்தோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






