March 2, 2026
சீரழியும் காவல்துறை!

சீரழியும் காவல்துறை!

சட்டம்-ஒழுங்கு, காவல் மரணங்கள், உளவுத்துறை தோல்வி…’ எனக் காவல்துறை மீதான விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில்… சமீபத்தில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன், ‘காவல்துறையில் நிலவும் அதிகாரத் தரப்பின் ஆட்டங்கள்’ குறித்து பொதுவெளியில் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், ஒட்டுமொத்த காவல்துறைக்குள்ளும் பூகம்பத்தையே உருவாக்கியிருக்கின்றன!

“சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதமும், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலனும் என்னைத் தொடர்ந்து பழிவாங்குகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்துக்குப் பாதுகாப்பு இல்லை. கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன்…” எனத் தன் உயரதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவே குற்றம்சாட்டியிருக்கிறார் சுந்தரேசன். இதற்கு முன்பாக, டி.எஸ்.பி அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் யாரும் இப்படி உயரதிகாரிகள் குறித்துப் பொதுவெளியில் வெடித்ததில்லை.

சுந்தரேசன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், உயரதிகாரிகள்மீது அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை யாரும் மறுக்கவில்லை. காவல்துறை மேலிடத்திலேயே கனத்த மெளனம்தான் நிலவுகிறது. ‘என்னதான் நடந்தது சுந்தரேசன் விவகாரத்தில்..?’ என நாம் விசாரிக்கக் களமிறங்கியபோது, “டேவிட்சனும் செந்தில்வேலனும் டிபார்ட்மென்ட்டையே சீரழிச்சுட்டாங்க. அதிகார துஷ்பிரயோகமும், ஒழுங்கீனமும், குரூப்பிசமும், வெறுப்பும் காவல்துறைக்குள் தாண்டவமாடுது…” எனக் குமுறுகிறார்கள் காக்கிகள்.

“தவறு செய்திருந்தால் தூக்கில் போடட்டும்…’’ – குமுறும் டி.எஸ்.பி சுந்தரேசன்!

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த சுந்தரேசன், தன் அரசு வாகனம் பறிக்கப்பட்டது தொடர்பாக, சமீபத்தில் மீடியாக்களிடம் பேட்டியளித்தார். அதில், “அமைச்சர் மெய்யநாதனின் பாதுகாப்பு எஸ்கார்ட்டுக்கு வேண்டும் என என்னுடைய வாகனத்தை மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் சொன்னதன் பேரில் போலீஸார் வாங்கிக்கொண்டனர். ஒரு வாரத்துக்கு மேலாகியும் ஜீப் இல்லாமல்தான் நான் பணிக்குச் செல்கிறேன். நான் நேர்மையாக இருப்பதால், என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிப் பழிவாங்குகின்றனர். சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் கொடுக்கும் அழுத்தத்தில் என்னை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் பழிவாங்குகிறார்” என்றார். இந்த விவகாரம் பூதாகரமானதும், டி.எஸ்.பி சுந்தரேசனைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு. அத்துடன், ‘உயரதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மயிலாடுதுறையைவிட்டு வெளியே செல்லக் கூடாது’ எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

“என்னதான் நடந்தது..?” என டி.எஸ்.பி சுந்தரேசனிடமே பேசினோம். “காக்கிச்சட்டைக்குள் கறுப்பு ஆடாக இருக்க நான் விரும்பவில்லை. அதுதான் எனக்குப் பிரச்னையாகி விட்டது. செங்கல்பட்டில் ஒரு கொலை வழக்கின் விசாரணையின்போது, உயிர் போகும் அளவுக்கு இருவரை போலீஸார் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அது தொடர்பான புகார், தமிழக மனித உரிமை ஆணையத்துக்கு வந்தபோது, ஆணையத்தின் விசாரணை டி.எஸ்.பி என்கிற முறையில் நான்தான் விசாரித்தேன். அதில், போலீஸ் தாக்கியது நிரூபணமானது.

அது தொடர்பாக, நான் கொடுத்த ரிப்போர்ட்டை மேலதிகாரிகள் விரும்பவில்லை. மனித உரிமை ஆணையத்திலிருந்த என்னை, மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவுக்குத் தூக்கியடித்தனர். மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதும், பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே, ஆளுங்கட்சியின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவர் உரிமம் இல்லாமல் நடத்திவந்த பாரை இழுத்து மூடினேன். எனக்குப் பல வகைகளில் அழுத்தங்கள் வந்தன. என்னை ஒரு வாரம் மெடிக்கல் லீவில் போகச் சொல்லி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். லீவு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த பின்னரும் என்னுடைய நடவடிக்கைகளை நான் நிறுத்தவில்லை. மயிலாடுதுறையில் உரிமம் இல்லாத 23 பார்களை மூடினேன். சட்டவிரோத மதுக் கடத்தல், மது விற்பனை குறித்து 1,200 வழக்குகளைப் பதிவுசெய்தேன். 700 பேரைக் கைதுசெய்து, அவர்களில் ஐந்து பேரைக் குண்டர் சட்டத்தில் அடைத்தேன். அதெல்லாம், இங்கிருக்கும் சில அதிகாரிகளுக்குப் பிரச்னையாக இருந்தது.

திருச்செந்தூர் குடமுழுக்குப் பாதுகாப்புப் பணிக்கு என்னை அனுப்பினார்கள். வேறொரு டி.எஸ்.பி-க்கு வழங்கப்பட்ட அந்தப் பணியை எனக்கு ஒதுக்கி, என்னைப் பழிவாங்குவதற்காகவே அனுப்பினார்கள். அதைத் தொடர்ந்து, திருவாரூரில் முதல்வர் வருகைப் பாதுகாப்புப் பணிக்கும் அனுப்பினார்கள். இப்படித் தொடர்ச்சியாக, மயிலாடுதுறைக்குள் நான் இருக்க முடியாத மாதிரி துரத்திக் கொண்டேயிருந்தார்கள். சமீபத்தில், மாவட்ட எஸ்.பி-யின் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் எனக்கு போன் செய்து, என்னுடைய ஜீப்பைக் கேட்டார். ‘ரெய்டில் இருக்கிறேன்… ஆர்டர் கொடுங்கள், வந்து தருகிறேன்’ என்றேன். ‘எங்கிருந்தாலும் பரவாயில்லை. வண்டியை அப்படியே ஒப்படையுங்கள்’ என்றார். நானும் ஒப்படைத்தேன். என்னிடமிருந்த ஜீப்பை வாங்கி ஏழு நாள்களாகின்றன. எனக்குச் சம்பளம் முறையாக வருவதில்லை. இன்கிரிமென்ட்டும் போடவில்லை. இந்த மனக்குமுறலைத்தான் மீடியாக்களிடம் கொட்டினேன்.

என் புகார்கள் குறித்து விசாரித்த டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், என்னிடம் விசாரணை நடத்தாமலேயே சஸ்பெண்ட் செய்வதற்குப் பரிந்துரை செய்தார். அரசும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. இது எந்தவிதத்தில் நியாயம்… ஏ.டி.ஜி.பி டேவிட்சனும், ஐ.ஜி செந்தில்வேலனும் சொல்லித்தான் நான் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறேன். எனக்கான நியாயத்தைக் கேட்டால், என்மீதான பழைய, பொய்யான புகார்களைப் பரப்பிவிடுகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், மனித உரிமை ஆணையமும் இதில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். நான் தப்பு செய்திருந்தால், என்னைத் தூக்கில்கூட போட்டுக்கொள்ளட்டும்…” என்றார்.
“அப்போதே சுந்தரேசனுக்கு குறிவைத்துவிட்டனர்..!”

சுந்தரேசன் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மயிலாடுதுறை காவல் அதிகாரிகள் சிலர், “செங்கல்பட்டு வழக்கு தொடர்பாக சுந்தரேசனிடம் டேவிட்சனும் செந்தில்வேலனும் பேசியிருக்கிறார்கள். போலீஸாருக்குச் சாதகமாக அறிக்கையைத் தரும்படி கூறியிருக்கிறார்கள். ‘உண்மையை மறைக்கச் சொல்றீங்களா… முடியாது சார்..!’ என்று சுந்தரேசன் சொல்லவும், ‘பின்னாடி வர்ற விளைவுகளையெல்லாம் நீங்க நினைச்சுப் பார்க்க வேண்டாமா..?’ என்று மிரட்டலாகக் கேட்டிருக்கிறார் செந்தில்வேலன். ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதமும் சுந்தரேசனுக்கு போன் செய்து, ‘கேட்டபடி அறிக்கையைக் கொடுக்கவேண்டியதுதானே… அதுல ஏன் பிரச்னை பண்றீங்க..?’ என மிரட்டியிருக்கிறார். அத்தனை மிரட்டல்களுக்குப் பிறகும், போலீஸ் விசாரணையில் இருவர் தாக்கப்பட்டதாகத்தான் அறிக்கை கொடுத்திருக்கிறார் சுந்தரேசன். அதில், ஏ.எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி-க்கள், எஸ்.ஐ உட்பட எட்டு போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார். அப்போதே, சுந்தரேசனுக்குக் குறிவைத்துவிட்டனர்.

சில சுயநல போலீஸ் உயரதிகாரிகளால், நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சுந்தரேசனும் ஒருவர். டேவிட்சனும் செந்தில்வேலனும் கொடுத்த அழுத்தத்தில்தான், சுந்தரேசனை மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் பாடாய்ப்படுத்தினார். எஸ்கார்ட் டூட்டிக்கென தனியாக வாகனங்கள் இருக்கும் நிலையில், சுந்தரேசனின் வாகனத்தைப் பறித்ததுகூட அவரை உளவியல்ரீதியாக துன்புறுத்தத்தான். இவர்களின் டார்ச்சர் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதமே விருப்ப ஓய்வுக்கும் விண்ணப்பித்துவிட்டார் சுந்தரேசன். அதற்கும் அனுமதியளிக்காமல் உயரதிகாரிகள் குடைச்சல் கொடுக்கவும்தான், பொறுமையிழந்து வெடித்துவிட்டார்” என்கிறார்கள்.

துதி பாடியவர்களுக்குப் பதவி… எதிர்த்தவர்கள்மீது பழிவாங்கல்!

ஏ.டி.ஜி.பி டேவிட்சன் மீது, “எல்லோரையும் ஒருமையில் திட்டுகிறார். சமூகரீதியாகப் பாகுபாடு காட்டுகிறார். தனக்குப் பிடிக்காத அதிகாரிகளைப் பழிவாங்குகிறார்…” என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே ‘ஈகோ’ மோதல் தொடர்வதால், டேவிட்சன் மீது புகார்கள் எழும்போது, அவையெல்லாம் தமிழ் அதிகாரிகள்மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்கப்பட்டன. ஆனால், தமிழ் அதிகாரியான டி.எஸ்.பி சுந்தரேசனே டேவிட்சனுக்கு எதிராகக் கொதித்தெழவும்தான், விவகாரம் சூடாகியிருக்கிறது.

நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், “தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், உளவுத்துறைக்கு ஏ.டி.ஜி.பி-யாக டேவிட்சனை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். அன்றிலிருந்து இன்று வரையில், தமிழக காவல்துறையை மொத்தமாக நகர்த்துவதே டேவிட்சன்தான். காவல்துறைத் தலைவரான சங்கர் ஜிவால் பரிந்துரைக்கும் பணியிட மாறுதல்களைக்கூட, திருத்தி வெளியிடவைக்கும் அளவுக்குச் செல்வாக்கோடு இருக்கிறார் டேவிட்சன். சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக அவர் பொறுப்பேற்ற பிறகு, அவருக்குத் துதிபாடி முக்கியப் பதவிகளைப் பெற்றவர்கள் ஏராளம். அதேநேரத்தில், அவருக்குக் கூழைக் கும்பிடு போடவில்லை எனப் பழிவாங்கப்பட்டவர்களும் ஏராளம். இன்ஸ்பெக்டர் ஒருவரைப் பணியிட மாற்றம் செய்யச் சொல்லி டேவிட்சன் போட்ட ஆர்டரை இரண்டு, மூன்று நாள்கள் தாமதமாக்கியதால், இன்றுவரை சட்டம்-ஒழுங்கில் எந்தப் பொறுப்பும் கிடைக்காமல் கடலோரம் காற்று வாங்குகிறார் ஒரு ‘ஜெய’மான பெண் அதிகாரி.

அதேபோல, தனக்கு ஒத்துவராத ‘மிஸ்டர்’ இளம் ஐ.பி.எஸ் அதிகாரியை, வெள்ளை மாளிகையில் டம்மி பதவியில் வைத்திருக்கிறார் டேவிட்சன். இவ்வளவுக்கும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு பிரபல தாதாவைத் தமிழகத்தைவிட்டே ஓடவைத்தவர் அந்த ‘மிஸ்டர்’ அதிகாரி. ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் பல்லைப் பிடுங்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட’ ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கைத் தனக்குப் பிடித்தவர் என்பதால், இன்றுவரையில் காப்பாற்றுகிறார் டேவிட்சன். இவருடைய அதிகார அனுசரணையால்தான் கொங்கு மண்டலத்திலுள்ள ‘மைக் நடிகர்’ பெயர்கொண்ட டி.ஐ.ஜி ஒருவர், உயரதிகாரிகளைத் துளியும் மதிக்காமல் நடந்துகொள்கிறார். சிறைத்துறையிலிருக்கும் சீனியர் அதிகாரி ஒருவர், டேவிட்சனின் தீவிர விசுவாசியாக இருப்பதால்தான், அந்த அதிகாரிக்கு எதிராக எந்த ரிப்போர்ட் வந்தாலும் அது மேலிடம் வரை செல்வதேயில்லை” என்று பட்டியலிட்டுக்கொண்டே சென்றனர்.

“உளவுத்துறைக்கு லாயக்கில்லாதவர் செந்தில்வேலன்!”

டேவிட்சன் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் குவிகின்றனவோ, அதே அளவுக்கு உளவுத்துறை ஐ.ஜி-யான செந்தில்வேலன் மீதும் குற்றச்சாட்டுகள் குவிகின்றன. நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் சிலர், “செந்தில்வேலன் உளவுத்துறைக்கு லாயக்கில்லாதவர் என்பதற்கு ஒரே உதாரணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்தான். மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டபோதே அவர் உரிய அலர்ட் கொடுத்திருந்தால், அடுத்த சில மாதங்களில் கள்ளக்குறிச்சியில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். உளவுத்துறையின் பெரும் தோல்வி அது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கவைத்து, அதன் மூலமாக அமலாக்கத்துறையின் தாக்குதல் வேகத்தை மட்டுப்படுத்தியது செந்தில்வேலன்தான். அதன் மூலமாக, முதல்வர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலரின் `குட்புக்’கில் இடம்பிடித்துக்கொண்டார். அதைத் தாண்டி, உளவுத்துறைக்குள் உருப்படியாக அவர் எதையும் செய்யவில்லை. உளவுத்துறை காவலர்களுக்கு வழங்கப்படும் ‘எஸ்.ஆர்’கூட, ஆசியம்மாள் காலத்துக்குப் பிறகு நின்றுபோய்விட்டது. அதைக்கூட அவர் பெற்றுத்தரவில்லை.

ஆட்சிக்கு எதிராகப் பிரச்னை கிளம்பினால், வேறொரு சின்னப் பிரச்னையைப் பெரிதாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில் கில்லாடி செந்தில்வேலன். ஆனால், அது மட்டுமே உளவுத்துறையின் வேலையல்ல. டேவிட்சனுக்கு எதிரானவர்கள்மீது என்ன ரிப்போர்ட் கொடுப்பது எனப் பார்ப்பது; முதல்வர் வீட்டுக்கு யாரெல்லாம் வந்து செல்கிறார்கள் எனக் கண்காணிப்பது, தி.மு.க-வின் கட்சி நிகழ்ச்சிகளில் வேவு பார்ப்பது போன்றவற்றில்தான் செந்தில்வேலனுக்கு அதிகம் கவனம் இருக்கிறதே தவிர, உளவுத்துறையை இயக்குவதில் சுத்தமாக இல்லை. சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை கமிஷனராகப் பணிபுரிந்தவர் தர்மராஜன். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை, அண்ணாநகர் சிறுமி வழக்கு, அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் என அரசுக்குப் பல நெருக்கடிகள் உருவானபோது, அதையெல்லாம் லாகவமாகக் கையாண்டவர். அவர் தனக்கு அச்சுறுத்தலாக வருவார் எனக் கருதியே, தர்மராஜன் மீது தவறான ரிப்போர்ட்டுகளை அளித்து அவரை இடம் மாற்றிவிட்டார் செந்தில்வேலன். இந்த இடமாறுதலுக்கான பேப்பர்ஸ் கையெழுத்தாகும் வரையில், டி.ஜி.பி சங்கர் ஜிவாலுக்கும், சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கும் இது தெரிந்திருக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்” என்றனர் வருத்தமாக.

‘இருவர் தர்பார்…’ சீரழியும் காவல்துறை!

நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஒருவர், “காவல்துறைக்குள் வடஇந்திய அதிகாரிகளுக்கும், தமிழ் அதிகாரிகளுக்குமிடையேயான மோதல் எப்போதும் நடப்பதுதான். ஆனால் அந்த மோதலை, சமூகரீதியாகவும் குழு மனப்பான்மையோடும் பெரிதாக்கியதே டேவிட்சனும் செந்தில்வேலனும்தான். முதல்வருக்கு எது தெரிய வேண்டும், எது தெரியக் கூடாது என முடிவெடுப்பதே இவர்கள் இருவரும்தான். காவலர்களின் பிரச்னைகளை, குறைகளை, துறையில் நிலவும் சிக்கல்களை இருவருமே கண்டுகொள்வதில்லை. ‘எஸ்.பி-க்களுக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறேன்…’ எனச் சொல்லிக்கொள்ளும் டேவிட்சன், வாராந்தர பரேடுகளில் எத்தனை எஸ்.பி-க்கள் காவலர்களின் குறைகளைக் கேட்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். காவல்துறைக்குள் இருக்கும் சகிப்புத்தன்மை முற்றிலுமாக வற்றிவிட்டது. காவலர்கள், உளவியல்ரீதியாகக் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதனால்தான், காவல்துறைக்குள் பொதுமக்கள்மீதான அத்துமீறல்கள் எல்லை கடந்து போகின்றன.

டேவிட்சன், செந்தில்வேலன் இருவரின் தர்பார் ஆட்டத்தால்… காவலர் பிரச்னை, பொதுமக்கள் பிரச்னை, அரசியல் பிரச்னை என எதையுமே கையாள முடியாமல், சீரழிந்துபோயிருக்கிறது காவல்துறை. தமிழகத்தின் உண்மையான கள நிலவரம் முதல்வரின் கவனத்துக்கே செல்வதில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இனியும் முதல்வர் அமைதியாக இருப்பது, அவர் கையில் வைத்திருக்கும் காவல்துறைக்கு நல்லதல்ல. இவர்களின் ஆட்டத்தால், அரசுத்துறையின் பல்வேறு தரப்பு அதிகாரிகளும், ஆட்சிக்கு எதிரான மனநிலைக்குச் செல்வார்கள்” என்றார்.

அவர் சொல்வது உண்மைதான். இந்த ஆட்சிக்கு, ஓர் இக்கட்டான சூழல் வருமென்றால், அது பெரும்பாலும் காவல்துறையால்தான் இருக்கும். மேலும், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தி.மு.க ஆட்சி அமைய வேண்டுமென, மூன்று அதிகாரிகள் அவரை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தியதுண்டு. அதே போன்ற சந்திப்புகளும் ஆலோசனைகளும் மெல்ல மெல்ல இப்போதைய எதிர்க்கட்சியிடமும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. ‘தி.மு.க ஆட்சி பறிபோக வேண்டும்’ என்ற எண்ணத்தைவிட, ஆட்டம் போடும் அதிகாரிகள்மீதான வெறுப்புதான், சில உயரதிகாரிகளை எதிர்க்கட்சியை நோக்கி நகர்த்தியிருக்கிறது. அதுவும், டேவிட்சன், செந்தில்வேலன் மீதான விமர்சனங்கள்தான் காவல்துறைக்குள் ஓங்கி ஒலிக்கின்றன. ‘அவங்க வெச்சதுதான் சட்டம்… அவங்க பண்றதுதான் தர்பார்…’ என்பது பெரும் புகைச்சலை அதிகாரிகள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. உள்துறைக்குப் பொறுப்பான முதல்வர் உஷாராவாரா?

செய்தி தொகுத்து வழங்கிய விகடனுக்கு நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *