
புதிய மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர்கள் திறப்பு
மதுரை.
மதுரை மாவட்டம், ரூ.17.1 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 31 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும்
பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
மதுரை மாவட்டம், திருப்பாலை தாகூர் நகர், 6-ஆவது தெருவில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , ஆகியோர், ரூ.17.1 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 31 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற 4 ஆண்டு காலத்தில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைத்துள்ளார்கள். கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய டவர் பிளாக் மருத்துவக் கட்டடம் மற்றும் பல்வேறு புதிய மருத்துவக் கட்டடம், 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 துணை சுகாதார நிலையங்கள், பல்வேறு வட்டார மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கட்டங்களை ரூ.468.85 கோடி செலவில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் , திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதி 10 தொகுதிகளில் ரூ.17.1 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 31 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட திருப்பாலை தாகூர்நகர், ஆனையூர் பாரதிபுரம், கள்ளந்திரி, கருப்பாயூரணி ஆகிய இடங்களிலும், மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனுப்பானடி, பாலரங்காபுரம் மற்றும் இந்திராநகர் ஆகிய இடங்களிலும், மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பாத்திமா நகர், கரிசல்குளம், பைக்காரா ஜவஹர் தெரு, சமயநல்லூர் ஆகிய இடங்களிலும், மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பி.பி குளம், கொடிகுளம், சம்பக்குளம் ஆகிய இடங்களிலும், மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் மற்றும் திடீர் நகர் ஆகிய பகுதிகளிலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் (நேதாஜி நகர்), வில்லாபுரம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் (அம்பேத்கர் நகர்), பெருங்குடி, எஸ்.புளியங்குளம் ஆகிய இடங்களிலும், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அம்பலத்தடி, கச்சைகட்டி, அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும், உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட தும்மக்குண்டு , விக்கிரமங்கலம், ஆத்தங்கரைபட்டி ஆகிய இடங்களிலும், மேலூரில் 2 கட்டங்களையும், திருமங்கலம் தொகுதிக்குட்பட்டசெக்காணூரணி ஆகிய இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ரூ.3.64 கோடி செலவில் 15 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், ரூ.8.96 கோடி செலவில் 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் கூடுதல் கட்டிடங்கள், ரூ.1.75 கோடி செலவில் சமயநல்லூர் துணை செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி கட்டிடம், ரூ.9 கோடி செலவில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கூடுதல் கட்டிடம் மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம், ரூ.10 கோடி செலவில் தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில், தொற்றுநோய்க்கான தனிமைபடுத்துதல் மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு கட்டிடம், ரூ.326.05 கோடி செலவில் மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டிடம் (JICA கட்டிடம்), கேத்லேப், நெஞ்சக மருத்துவ பிரிவு கட்டிடம், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், சீமாங் கட்டிடத்தில் பார்வையாளர் கூடம், அவசர ஊர்தி மற்றும் ரூ.93.45 கோடி செலவில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வியியல் கூடம், கூடுதல் முதுநிலை மாணவர் விடுதிகள், கூடுதல் மாணவியர் விடுதிகள், புதிய நூலக கட்டிடம், கருத்தரங்கம் சீரமைப்பு, விலங்குகள் கூடம் ஆகிய பல்வேறு வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 03.07.2025-அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.1.20 கோடி – எஸ்.ஆலங்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரூ.1.20 கோடி – ஆரப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.70 கோடி மதிப்பீட்டில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையொட்டி விரைவில் கட்டிடப்பணி தொடங்கப்படவுள்ளது.
ஆஸ்பிரின், கிளோபிடோக்ரல், அட்ரோவாஸ்டாட்டின் ஆகிய 3 மாத்திரைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 மாத்திரைகள் இருதய பாதிப்பு நோய்க்கு முதல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முதல் சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சை பெற்று இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 37,000 நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மதுரை அலங்காநல்லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வின் போது இருதய பாதிப்படைந்து அலங்காநல்லூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சை பெற்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 1084 படுக்கைவசதிகள் உள்ளன. அதில் புதிய கட்டிட வளாகத்தில் 700 படுக்கைகளும் பழைய கட்டிட வளாகத்தில் 384 படுக்கைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. பழைய கட்டிட வளாகத்தில் மேலும் 250 படுக்கைகள் உள்ளன. இதில் 194 படுக்கைகள் உள்நோயாளிகளுக்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. 6 படுக்கைகள் நோயாளிகளின் உதவியாளர்களுக்காக காத்திருப்பு வளாகத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் 50 கூடுதல் படுக்கைகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. (மொத்தப்படுக்கைகள் 1334), அரசு மருத்துவமனையில் இன்று நள்ளிரவு வரை 978 உள்நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் புதிய வளாகத்தில் 400 உள் நோயாளிகளும் பழைய கட்டிட வளாகத்தில் 578 உள்நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகப்பேறு மருத்துவத்திற்காக வரும் நோயாளிகளின் உதவியாளர்களுக்காக காத்திருப் வளாகத்தில் உபயோகப்படுத்தப்படும் 6 படுக்கைகளில் கிழிந்து இருந்த ஒரு படுக்கை உடனடியாக மாற்றப்பட்டு விட்டது.மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சியில், படுக்கைவசதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லை என , உறுதி அளிக்கப்படுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.