
நிலக்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அலுவலக உதவியாளருக்கு பாராட்டு
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 30 ஆண்டுகள் காவலர் மற்றும் அதனைத் தொடர்ந்து அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த கருப்பையா நேற்று வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றார்.
கருப்பையாவிற்கு சங்கத்திலிருந்து நிதி உதவி மற்றும் பாராட்டு விழா நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல் ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்க பொது வினியோகத் திட்ட சார் பதிவாளர் சாந்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சுந்தரபாண்டி வரவேற்று பேசினார். விழாவில் கடன் சங்க சார்பாக குடும்ப நல நிதியும், பாராட்டு சான்றும், அலுவலகப் பணியாளர்கள் நிதி உதவியும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் அணைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மதிவாணன், நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் பொன் முருகன், சங்க காசாளர் முருகன், கடன் சங்க முன்னாள் முதுநிலை எழுத்தர் நடராஜன், மற்றும் சங்கப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






