March 2, 2026
இந்தியாவைக் காக்க இளைஞர்களின் போதை பழக்கத்தை விரட்ட வேண்டும்.. கல்வியாளர் ரமேஷ் பிரபா..

இந்தியாவைக் காக்க இளைஞர்களின் போதை பழக்கத்தை விரட்ட வேண்டும்.. கல்வியாளர் ரமேஷ் பிரபா..

மதுரை:

இளைஞர்களிடம் அதிகரித்துள்ள போதைப் பழக்கங்களை விரட்டுவதன் மூலமே நாடு வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும் என கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.

பேனாக்கள் பேரவை அமைப்பின் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகற்பகவள்ளி வித்யாலயாவில் நடந்தது.

எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் வரவேற்றார். மதுரையின் அட்சயப்பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முன்னிலை வகித்தார். மூத்த பத்ரிகையாளர் நூருல்லா, கவி பி.வி.ராஜ்குமார் விருந்தினர்களை அறிமுகப் படுத்தினர்.

சிறப்பு விருந்தினராகக் கல்வியாளர் கலந்து கொண்ட ரமேஷ்பிரபா பேசியதாவது; “தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்பவர்களாக, வியூக வகுப்பாளர்கள் இப்போது உள்ளனர்.

அவர்களின் வழிகாட்டுதல் படியே பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

2004 பாராளுமன்றத் தேர்தல், கலைஞர் முதல்வராக வெற்றி பெற்ற 2006 தேர்தலுக்கும் ஒரு குழுவிற்கு தலைமை ஏற்று வியூகம் வகுத்துக் கொடுத்தது நான் தான். அன்றைக்கு டிஜிட்டல் வசதி இல்லாததால் வெளியே தெரியவில்லை.

இன்றைய இளைஞர்கள், சோசியல் மீடியா உட்பட எதிர்மறை வழிகளில் செல்கின்றனர். போதை பழக்கத்திற்கும் ஆளாகி உள்ளனர்.

அதனால் உண்டாகக்கூடிய வன்முறை கலாச்சாரத்திற்கும் வழிவகுக்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் போதைப் பழக்கம் இளைஞர்களிடையே பரவலாகவும், ஆழமாகவும் வேரூன்றி உள்ளது. எதிர்கால இந்தியாவின் நலன் கருதி இதை ஒழிக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய கல்விமுறை, மாணவர்களுக்கு 98% பயனளிக்கும் .இதை விளக்க தமிழ்நாடெங்கும் 100 பயிலரங்கங்களை நடத்தி உள்ளோம்.

தமிழ் மொழியை ஐந்தாம் வகுப்புவரை கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதன்பின், ஆங்கிலம் தான் சரியாக இருக்கும்.

பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்காக ஜெயித்துக் காட்டுவோம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, 30 லட்சம் மாணவர்களை ஊக்குவித்துள்ளோம்.

மாணவர்களின் இன்றைய போக்குக்கு பெற்றோர்களும் முக்கியக் காரணம்.

மேல்படிப்பு, வேலை என ஆலோசனை கேட்க வரும்போதே இதுதான் வேண்டுமென முன்முடிவுடன் வருகிறார்கள். அது, சரியான வழியல்ல” இவ்வாறு அவர் பேசினார்.

நெல்லை பாலு பேசுகையில், “தம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய எப்படி வேண்டும்.

மக்கள் விரும்பி தானமிடும் ஒவ்வொரு ரூபாயும், உரிய வறியவருக்கு சென்றடையும் வகையில், தாமே ஒவ்வொரு நாளும், உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்று, ஒவ்வொருவருக்கும் வழங்குகிறேன்.

மதுரை அழகர்கோயில் அருகே, பொய்க்கரைப் பட்டியில் காஞ்சி மகாபெரியவருக்கு, பெரியதொரு கோயிலை எழுப்பி வருகிறேன்.

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்” என்றார்.

நிகழ்வில், இந்தியன் ஃப்ரண்ட் லைனர்ஸ் அறக்கட்டளை, மனித நேய அமைப்பினர் ஏழை மாணவர்களின் கல்விக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

கவி டி.என்.ராதாகிருஷ்ணன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். சாய் சங்கரா பஞ்சாபகேசன், அஜந்தா மைன்ஸ் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *