March 2, 2026
தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளை முன்னிட்டு கம்பத்தில் 35 பேர் உடல்தானம் !

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளை முன்னிட்டு கம்பத்தில் 35 பேர் உடல்தானம் !

கம்பம் ,செப்.14 –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பத்தில் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 35 பேர் உடல் தானம் செய்தனர் .

தலைசிறந்த நாடாளுமன்ற வாதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு உடல் தானம், கண் தானம் செய்ய வேண்டும் என கட்சியின் மாநிலக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தோழர்கள் கண் தானம், உடல் தானம் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் 35 பேர்கள் உடல் தானம் செய்வதற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்தனர்.

கம்பத்தில் நடைபெற்ற யெச்சூரி நினைவேந்தல் கூட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பன்னீர்வேல் தலைமை வகித்தார்.

ஏரியாச் செயலாளர் கே.ஆர்.லெனின் உடல் தானம் குறித்து உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர் வேலுமணி கலந்து கொண்டு, உடல் தானம் என்பது
ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் அவரது உடல், பலரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு பெரும் கொடையாகும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து உடல் தானம் செய்வதற்கு 35 பேர்கள் கொடுத்த விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன் நிறைவு செய்து பேசினார்.

நிகழ்ச்சியில் கம்பம் வர்த்தகர்கள் சங்க தலைவர் எல்.முருகன், செயலாளர் ஜாகீர், துணிந்து நில் அறக்கட்டளை தலைவர் டாக்டர் வேல்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வெண்மணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.மோகன், ரெங்கேஸ்வரன், ஏரியாக்குழு உறுப்பினர்கள் பாலகுருநாதன், இம்ரான்கான்,சித்திகா பர்வீன், மலரவன், மணிகண்டன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *