
இசை நாயகனின் பொன்மாலை பொழுதில் இசை கச்சேரியாகிய தமிழக அரசின் இசைஞானி இளையராஜா 50 - ஆண்டுகள் பாராட்டு விழா…
கலைஞர் செய்திகள் சேனலில் மாலை 6.00 மணிக்கு பாடல் கச்சேரியுடன் ஆரம்பித்த நிகழ்வு. கோவில் புறா படத்தில் வரும் “அமுதே தமிழே அழகிய மொழியே” முதல் பாடலாக இசைஞானி குரலில் ஆரம்பித்தது.
பாடலின் கடைசியில் அருகில் அமர்ந்திருந்த கலைஞானி கமலுக்கும் மைக்கை நீட்டி இருவரும் சேர்ந்து சில வரிகள் பாடியது அழகு.
இதில் என்ன விசேசம் என்றால் மேடையில் பாடப்பட்ட அனைத்து பாடல்களையும் தேர்ந்தெடுத்தது மாண்புமிகு தமிழக முதல்வர் தானாம்…
அமுதே தமிழே அழகிய மொழியே…
மடைதிறந்து தாவும் நதியலை நான்…
அடி ராக்கம்மா கைய தட்டு…
செந்தூரபூவே செந்தூரபூவே சில்லென்ற…
அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு…
சின்ன தாயவள் தந்த ராசாவே…
உன்னை நினைச்சி நினைச்சி உருகி…
ஒரு கிளி உருகுது உரிமையில்…
ராஜா கைய வெச்சா அது ராங்கா…
பொன்வானம் பன்னீர் தூவுது…
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே…
மாறுகோ மாறுகோ மாறுகயி…
உன்னை நினைச்சி நினைச்சி பாடல் பாட ஆரம்பித்தவுடன் துணை முதல்வர் அவரது மனைவியாரிடம் தனது மலரும் நினைவுகளை சொல்லி இருப்பார் போல.. இருவர் முகத்திலும் புன்னகை கலந்த உரையாடல்.
வழக்கமான இசை கச்சேரிகளில் விபாவரிக்கு தமிழ் தெரியாது என்று இசைஞானி காண வந்த ரசிகர்களிடம் கூறுவதை போல அவர் பாடிய செந்தூரபூவே பாடலின் இடையில் கமலிடம் இசைஞானி கூறி இருப்பார் போல.
பாடல் முடிந்ததும் இந்த தகவலை கமல் மைக்கில் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.
நேற்று விழாவிற்கு சென்றிருந்தவர்களுக்கு வாழ்வின் கனவான சிம்பொனியை கேட்கும் அற்புத தருணத்தை பாடல் பாடி முடிந்ததும் அந்த சிம்பொனி கலைஞர்களை கொண்டு சிறப்புற அரங்கேற்றம் செய்த செய்தியை மட்டும் அறிய முடிந்தது.
பின் இசைஞானியின் வாழ்க்கை வரலாறை ஒரு குறும்படமாக வடிவமைத்திருந்தார்கள். அந்த குறும்படத்தில் பஞ்சு அருணாசலமாக நடித்தவர் அவரின் மகன் திரு.சுப்பு பஞ்சு.
கலைஞர் இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்த நிகழ்வுடன் அந்த குறும்படத்தின் இறுதி காட்சியை முடித்திருந்தது வெகு சிறப்பு.
உதயநிதி வரவேற்புரை பேசி முடித்தவுடன் கலைஞானி கமல் வாழ்த்துரை வழங்க வந்தார். ரொம்ப நேரம் பேசாமல் சில வரிகள் மட்டும் பேசி முடித்து விட்டு ஹேராம் படத்தில் வரும் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” பாடலின் வரிகளை இசைஞானிக்கான பாராட்டு வார்த்தைகளாக்கி பாடி இறுதியில் “உயிரே வாழ் இசையே வாழ் தமிழே வாழ்” என பாடி முடித்து இசைஞானியிடம் சென்று அவருடைய டிரேட்மார்க்கான முத்தத்தை இசைஞானியின் கைகளில் அன்புடன் கொடுத்து விட்டு இறுக்கைக்கு சென்றார்.
சூப்பர் ஸ்டார் வாழ்த்துரை பேச வரும் போது வழக்கம் போல கரகோசம். 70’s 80’s 90’s வந்த பாடல்களை இன்றைய படங்களில் 2,3 போட்டால் பயங்கர ஹிட் ஆகி விடும் என்று தனது கூலி படத்தையும் உதாரணமாக்கி பஞ்ச் வைத்தார்.
வழக்கம் போல சொல்லும் குட்டி கதைக்கு பதிலாக இரு வரி கதையாக “கிராமத்தில் நெல்லை ஒருவர் தள்ளி தள்ளி கொடுக்க அதை இன்னொருவர் அள்ளி அள்ளி அளந்து மற்றவர்களுக்கு பகிர்வார்” என்பதை மேற்கோளாக்கி, கான சரஸ்வதி இசையை தள்ளி தள்ளி கொடுக்க இசைஞானி அதை நமக்கு அள்ளி அள்ளி கொடுத்ததாக சிலாகித்தார்.
வழக்கம் போல தனது நடிப்பில் வந்த படங்களை காட்டிலும் கமல் படத்திற்கு நல்ல பாடல்களை கொடுத்தார் என்பதை “தென்பாண்டி சீமையிலே” பாடலை மேற்கோள் காட்டிவிட்டு, மேடையில் தான் எவ்வளவு நேரம் பேசினாலும் வாழ்த்துகளை கமல் நாலு வரி பாடலாக பாடி பேர் வாங்கிட்டாரு என சொல்லிவிட்டு சிரித்தது அழகு.
தலைமையுரை பேச முதல்வர் வந்தவுடன் “ராஜாதி ராஜன் இந்த ராஜா… நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா” என இரு வரிகள் இசைஞானியை பார்த்து பாடிவிட்டு 50 ஆண்டு கால சாதனைகளுடன் “ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை”வரிகளுடன் தமிழ் இலக்கண இலக்கியங்களை இசை ஆல்பமாக வெளியட வேண்டும் என இசைஞானியிடம் தமிழக மக்களின் சார்பாக கோரிக்கை வைத்தார். மேலும் முத்தாய்ப்பாக இசை துறையில் சிறப்புற விளங்கும் கலைஞர்களுக்கு இனி வரும் காலங்களில் வருடா வருடம் “இசைஞானி இளையராஜா” என்ற பெயரில் விருது வழங்கப்படும் என்பதுடன் அதே மேடையில் இசைஞானிக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இசைஞானியை மேலும் கௌரவப்படுத்தினார்.
இறுதியில் இசைஞானி ஏற்புரையை நிகழ்த்தும் போது தனது ‘வெட்டவெளிதனில் கொட்டி கிடக்குது, சங்கீத கனவுகள்’ புத்தகங்களை காரில் வரும் போது படித்து விட்டு நிகழ்வுக்கு வந்த கலைஞர், தனக்கு கொடுத்த இசைஞானி பட்டத்தை நெகிழ்வுடன் நினைவாக பகிர்ந்தார்.
தனது எண்ணத்தில் தோன்றிய கற்பனையை எழுத்து வடிவமாக்கி அதை சிம்பொனியாக படைத்ததை கூறி நேரடியாக வாத்திய கலைஞர்கள் வாசிக்கும் போது நாம் கேட்டு உருகி நாம் கண் கலங்குவோம் என்பதை கமலை அழைத்து அவரது கர்சிப் கண்ணீரால் நனைந்திருப்பதை காட்டியது உணர்ச்சி பிரவாகமாக இருந்தது.
சிம்பொனி அனுபவத்திற்காக இசைஞானி கமலை அழைத்தது போல, அழைக்காமலே சூப்பர் ஸ்டார் இசைஞானியிடம் சென்று மைக்கில் ஜானி பட சூட்டிங் வேளையில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் இசைஞானியுடன் டிரிங்க் அடித்த நிகழ்வை கூறி ‘அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே. இதில இவருக்கு லவ் வேற, இன்னும் விசயங்களை அடுத்த நிகழ்வில் சொல்றேன்’ என கூறிவிட்டு செல்லும் போது இவர்களின் மலரும் நினைவுகள் சிறிது நேரம் வந்து அவர்களுடன் சேர்ந்து பார்ப்போரையும் சிரிப்பு பரவசத்தில் ஆழ்த்தி விட்டது.
இசைஞானி பாராட்டு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தவர்கள் கண்டு இன்புற்ற சிம்பொனி இசையை அனைவரும் கண்டு களிக்கும் விதமாக விரைவில் சென்னையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதற்கு முதல்வர் உதவி புரிந்திட வேண்டும் என கோரிக்கை வைக்க, முதல்வரும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டது நமக்கு இருந்த சிம்பொனி ஏக்கத்திற்கு ஒரு இன்ப செய்தியாக இருந்தது. எல்லா நிகழ்விலும் ஆரம்பத்தில் பாடப்படும் பாடல் வரியானது இந்த நிகழ்வில் இசைஞானி குரலில் கடைசியாக ஒலித்தது மேலும் நிகழ்வை சிறப்பாக்கியது.
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்…
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ….
இசைஞானி 50






