
தமிழகத்தில் எங்கெல்லாம் காலனி வீடுகள் உள்ளதோ அங்கெல்லாம் பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மதுரையில் பேட்டி:
மதுரை:
தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அருந்ததிய அமைப்புசாரா பெண் தொழிலாளர்கருக்கான இலவச வீட்டு மனைகள் மற்றும் பட்டாக்கள் வழங்குவது குறித்து, விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
மூன்று மாதங்கள் நடந்த ஆய்வின் முடிவுகள் , மதுரை செய்தியாளர் அரங்கில் வெளியிடப்பட்டது. இதில், அமைப்பின் மாவட்ட செயலாளர் சரண்யா பொருளாளர் அழகுராணி, பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிவேதிதா, ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், முன்னாள் சிபிஎம் எம்.எல்.ஏ. பாலபாரதி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
சி.பி.எம். முன்னாள் எம். எஅ.ஏ. பாலபாரதி கூறியதாவது:
தமிழகத்தில், எங்கெல்லாம் காலனி வீடுகள் உள்ளதோ அங்கெல்லாம் பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளது. அரசு ஆய்வு நடத்தி ஏற்கனவே காலனி வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டா வழங்க வேண்டும். மாநிலத்தில் பல இடங்களில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசு இலவச மனையை வழங்கியிருந்தாலும், அருந்ததியர் அதிகம் வாழும் பகுதிகளான மதுரை திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் புதிய வீடுகள் கட்டும் திட்டம் இல்லை.
எனவே, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியமோ அல்லது நகர்ப்புற மேம்பாட்டு கழகமோ அருந்ததியர் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.
ஆளுநர் விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், அருந்ததியர் மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தால் பதில் கிடைப்பதே இல்லை.
நடந்து முடிந்த ஆய்வில் 543 பேருக்கு வீட்டு மனைகள் இருந்தாலும் இலவச பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளது. தவிர 830 பேருக்கு இலவச வீட்டு மனைகள்வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ‘ உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பதில் கிடைக்கவில்லை. நிர்வாகம் துரிதமாக செயல்படாததே இதற்கு காரணம். இவ்வாறு கூறினார்.
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கூறுகையில், ” தூய்மை பணி விவசாய கூலிகள் என, பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ள அருந்ததியர் சமுதாயத்தினர் இருப்பதால் அவர்களுக்கான அடிப்படை தேை கிடைப்பது சிக்கலாக உள்ளது. வீடு இருப்பவர்களுக்கு பட்டாவும் பட்டா வைத்திருப்பவர்களுக்கு வீடு இல்லாத நிலையும் நிலவி வரும் நிலையில் எதிர்கட்சிகள் தேர்தலை முன்வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என்றார்.






