March 2, 2026
கீரனூர் அருகே செனையக்குடியில் சைவம், வைணவம், சமணம் என வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிப்பு

கீரனூர் அருகே செனையக்குடியில் சைவம், வைணவம், சமணம் என வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடியில் சோழர் கால கலைப் பாணியிலான சைவம், வைணவம், சமணம் என மூன்று மதங்களுக்குரிய சிற்பங்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் தலைவர், மேலப்பனையூர் கரு. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லவியல் துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது.
சிவன்கோவில் : செனையக்குடி பிடாரிகோவில் அருகே வயல் மேட்டில், சோழர்கால கற்றளி இடிமானங்களுடன் தவ்வை எனும் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. சிற்பத்தின் இரு புறங்களிலும் , மாந்தன் மாந்தியுடன், உச்சியில் குடையும், பக்கவாட்டின் மேலாக இரு சாமரம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் தோற்ற அமைதியின் அடிப்படையில் இதனை பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம் , இவ்விடத்தில் சைவக்குறியீடான நந்தி சிற்பம் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது இந்த நந்தி சிற்பமும் அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். கோவில் இடிமானத்தில் வைணவ நிலக்கொடைக்குரிய வாமன கோட்டுருவ பலகைக்கல் கண்டுபிடிக்கப்பட்டு கல்வெட்டுப்படி எடுக்கப்பட்டது இதன் காலம் கணிக்கப்படவில்லை.

இவ்விடத்தில் பிற்கால சோழர்களின் பாணியிலான தூண்கள், கட்டுமான உறுப்புகளுடன், காணப்படுகின்றது.

சூலக்கல்:
செனையக் குடி ஊரின் பனைமரக்காட்டில் சிவன் கோவில் நிலத்தை குறிக்கும் சோழர் கால கலைப் பாணியிலான சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்

அய்யனார் சிற்பங்கள்:
கரும்பு வயல்வெளியில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது இதில் அய்யனார் தாமரை மொட்டினை வலது கையில் ஏந்தியவாறும், இடது கையை இடது முழங்காலில் வைத்தவாறு, சாந்த நிலையில் புன்னகைத்தவாறு செதுக்கப்பட்டுள்ளது, தோற்ற அமைதியின் அடிப்படையில் இதனை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். மேலும் செனையக்குடி பெரிய கண்மாயில் புதர்க்காட்டில் வலது கை உடைந்த நிலையில் செண்டு அமைப்புடன் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு அய்யனார் சிற்பமும் காணப்படுகிறது, இரண்டு சிற்பங்களும் ஜடா பாரம் எனப்படும் சுருண்ட முடியுடன் சோழர் கலைப்பாணியில் காணப்படுகின்றன.

ஆறுமுக முருகன் சிற்பம்:
வயல்வெளியில் உள்ள ஒரு மேட்டில் , ஆறு தலைகளுடன் கூடிய முருகன் சிற்பம் , மயில் வாகனத்தில் அமர்ந்தவாறு மார்புச் சங்கிலியுடன் 12 கரங்களில் வலது புறத்தில் ஆறு கரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆயுதங்களுடன் தாமரை பீடத்தில், வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஒப்புமையில் பனிரெண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கருதலாம்.

விஷ்ணு சிற்பம்:
செனையக்குடி கண்மாயின் கிழக்கு புறமுள்ள பொட்டல் காட்டில் சங்கு சக்கரத்துடன் நின்ற நிலையில், 13ம் நூற்றாண்டின் கலைப் பாணியுடன் கூடிய விஷ்ணு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

தலை இல்லாத சமணர்:
விஷ்ணு சிற்பத்தின் அருகிலேயே புதர் மறைவில் தலை மற்றும் கால் உடைந்த நிலையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த எளிய தோற்ற அமைப்புடன் சமண சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய சைவ வைணவ சிற்பங்களுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது. அக்னி ஆற்றங் கரையில் தொடர்ச்சியாக சமணத் தடயங்கள் கிடைத்து வருவதன் மூலம் சமணம் சார்ந்த இந்த கண்டுபிடிப்பு புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வெளிச்சமாக இந்த கண்டுபிடிப்பு அமையும் என்றார்.

ஆய்வின்போது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முன்னாள் மாணவர் ரெங்கராஜ், செனையக்குடி ஊர்த்தலைவர் மாரியப்பன், தொல்லியல் ஆர்வலர் சிவனடியார் மாரிமுத்து, கிராம உதவியாளர் மாரிமுத்து, முருகேசன், பெரண்டையாப்பட்டி, திருநாவுக்கரசு,வாசுதேவன், செனையக்குடி மணிகண்டன்,மணி, பாலசுப்பிரமணியம்,திலீப், முருகானந்தம், வெள்ளைச்சாமி, பிரகாஷ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *