
தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணைய இயக்குனர் திரு ரவிவர்மன் தாராபுரத்தில் நேரில் விசாரணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளி மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 26-6-2025 தேதி சென்னாக்கல்பாளையம் கிராமத்தில் மேட்டுக்காட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரித்த அலங்கியம் போலீஸார், காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் முருகன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இந்நிலையில், பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முருகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது மாற்று சமூகத்தினர் அடித்து படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது எனவே மாவட்ட காவல்துறை தனி அதிகாரியை நியமித்து மறு விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தமிழ் புலிகள் கட்சி திராவிட தமிழர் கட்சி சார்பில் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
சம்பவத்தில் எஸ்.சி எஸ்.டி ஆணையம் நேரில் விசாரணை செய்ய வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் மனு அளித்தார் அந்த மனுவில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்து இறந்து போன முருகனின் மனைவி மற்றும் மகள்களிடம் தனி அறையில் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தாராபுரம் சென்னாக்கல் பாளையத்தில் தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையத்தின் இயக்குனர் திரு. ரவிவர்மன் அவர்கள் நேரில் வருகை தந்து தூக்கி தொங்கிய இடம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நேரில் விசாரணை செய்தார்.
இதில் தமிழ் புலிகள் கட்சி சமூக நீதி மக்கள் கட்சி திராவிட தமிழர் கட்சி ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் எஸ்.சி எஸ்.டி ஆணைய இயக்குனர் அவர்களிடம் காவல்துறை மீது புகார் தெரிவித்த மனு கொடுத்தனர்.






