
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் திருநன்றியூர்-ஆலவேலி சாலையை உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள திருநன்றியூர், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சி கிராம மக்களை இணைக்கின்ற சாலை கடந்த ஓராண்டாகவே குண்டும் குழியுமாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.
விவசாயம் சார்ந்த கிராமங்களையும் குக்கிராமங்களையும் இணைக்கின்ற காரணத்தினால் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மேலும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோறும் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளார்கள்.

மேலும் இச்சாலைக்கு அருகில் புகழ்மிக்க லஷ்மிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபாடு நடத்த வேண்டும் என்ற ஐதீகம் இருப்பதால் நாடு முழுவதும் இருந்து தினசரி பக்தர்களும் அதிக அளவில் இச்சாலை கடந்து தான் கோவிலுக்கு வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சாலை போடப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள், நடவு எந்திரங்கள் போன்றவை அடிக்கடி சென்றதால் அச்சாலை உள்வாங்கி அதிக அளவில் பல்வேறு பள்ளங்கள் ஏற்பட்டுவிட்டது.
மக்களின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால் அச்சாலையின் தேவையும் மிக அவசியமானதாகும். இதுகுறித்து அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பலமுறை செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையரிடமும் இதர அதிகாரிகளிடமும் மீண்டும் மீண்டும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கின்றது. ஆகவே அச்சாலை சீரமைக்கப்படாததால் அரசின் மீது மக்களின் கோபம் திரும்பி உள்ளது. தற்போது தேர்தல் காலகட்டம் என்பதால் இச்சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அப்பகுதி மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.






