April 17, 2026
அந்தியோதயா விரைவு ரயில் ரத்து அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்

அந்தியோதயா விரைவு ரயில் ரத்து அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்

நாகர்கோவில் ஜுன் 23
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைந்த கட்டணத்தில் நாகர்கோவிலில் இருந்து பயணித்து வந்த ஏழைகளின் விரைவு ரயில் ஒரு மாத காலம் ரத்து செய்வதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
‌ கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவிலிருந்து தினமும் சென்னைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ரயில் இன்றையிலிருந்து (ஜுன் 23) ஒரு மாத காலம் ரத்து செய்வதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு செல்வதாகவும் தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

அந்தியோதயா ரயிலில் பயணிகள் மதுரை, திருச்சி, மார்க்கமாக தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு சென்றடைந்தார்கள். இந்த ரயில் இனிமேல் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் என்று இரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு குறைந்த கட்டணத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் முன்பதிவு இல்லாத ஒரே ரயில் அந்தியோதயா மட்டும் தான். இனிமேல் இந்த அந்தியோதயா விரைவு ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், முன்கூட்டியே திருநெல்வேலிக்கு செல்ல வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.

இந்த ரயில் முதலில் ( 2018) திருநெல்வேலியில் இருந்து தான் சென்னைக்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. பின்பு தான் நாகர்கோவிலுக்கு மாற்றப் பட்டது. எனவே அந்தியோதயா ரயில் காலப்போக்கில் தொடர்ந்து ரத்து செய்ய பட்டு விடுமோ என்கிற குழப்பம் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மனதில் உருவாகியுள்ளது.

எனவே அந்தியோதயா ரயிலில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயணம் செய்யும் விதத்தில் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை விட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *