
ஒரே இடத்தில் 81 ஜீவசமாதிகள் இருக்கும் அருள்மிகு அனந்த வள்ளி உடனுறை ஏகநாதசுவாமி அதிசய ஆலயம் கிண்ணிமங்கலம்.
மூலவர் : ஏகநாதர் சுவாமி
அம்மன்/தாயார் : ஆனந்தவள்ளி நாயகி
தல விருட்சம் : வில்வ மரம்
ஊர் : கிண்ணிமங்கலம்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா: கிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி ஜீவ சமாதியில் நித்தம் பூஜை நடைபெறுகிறது .ஒவ்வொரு பிரதோஷ நன்னாளிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது. சத்குருநாதர் ஜீவ சமாதி அடைந்த பெருநாளில் சிறப்பான விசேஷ அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது. மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர சங்கடஹர சதுர்த்தியில் கணபதிக்கும், கார்த்திகையில் சுப்ரமணியருக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது.
திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஏகநாதர் சுவாமி திருக்கோயில், கிண்ணிமங்கலம், செக்கானூரணி, மதுரை.
பொது தகவல்:
காவல் தெய்வமாக வீரபத்திரரும் பைரவரும் நின்று காத்து இரட்சிகின்றனர்.
கன்னி மூலையில் கணபதியும் வாயுமூலையில் வள்ளி தெய்வானை உடன் உறைய வண்ணமயில் மீதமர்ந்த வள்ளல் சுப்ரமணியரும் அருளாட்சி புரிந்துகொண்டுள்ளனர்.
தல வரலாறு:
குருவே சரணம்! குருவடி சரணம்!
சுமார் 4112 வது வருடங்களுக்கு முன் சைவ வேளாளர் குலத்தில் இன்றைய சின்னமனூர் (சங்க காலத்தில் திரு பூலாநந்திஸ்வரபுரம் ஆற்றங்கரை ஓரத்தில்) பிறந்தவர்.
பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் 2ம் சீடரின் கீழ் பயிற்சி பெற்ற 17 பேர் மானசரோவர் அனுப்பப்பட்டு ரிஷிகளின் வழிகளில் பயிற்சி பெற்று அதில் குருநாதர் மட்டும் சதுரகிரியில் யமவனம் என்ற பகுதியில் மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார்.
பின் நாகமலை நடுப்பகுதியில் காகபுஜண்டர் சித்தர் தவம் செய்ததாக கூறப்படும் ஒரு குகையில் இறுதி தவம் செய்துள்ளார்.
நாகமலையில் வடக்கு பகுதியில் காக ஊத்து என்ற இடத்தில் காயகல்ப மருந்து தயார் செய்து சாப்பிட்டுள்ளார்.
அதனால் ஏற்படும் காயசித்தி பல யுகங்களுக்கு நிலைத்து நிற்பதற்காக போகர் ஆசிரமத்தில் கற்ற வித்தையிலிருந்து நவபாஷாணத்திலிருந்து 9 வகையாக செம்புகளை பிரித்து அவுரி சாறில் கரைக்கப்பட்ட ஊசிகாந்தம், இந்திரகோபம் போன்ற 16 பொருள்களை சேர்த்து ஒரு கிண்ணி (bowl) செய்துள்ளார் .
அவ்வாறு செய்த கிண்ணியை பசுமாட்டின் பால்மடிக்கு கீழ் வைத்தால் தானாக பால் கறக்கும் , பின் அது மருந்தாக மாறும்.
இதை ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டபின் சற்குரு அவர்கள் தன் தவ வலிமையால் அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்று தான் ஜீவ சமாதி அடைவதற்குரிய காலம் கனிந்துவர தான் சமாதிநிலை அடைவதற்கான யோகபூமியைத் தேர்தெடுக்கத் திருவுளம் கொண்டார்.
நாகமலையில் நாகதீர்தத்திற்கு அருகாமையில் சற்குரு தவம் செய்து வந்தார்.💥
அப்பொழுது அங்கு மாடு மேய்க்கவந்த சிறுவனிடம் தூரில்லாத காந்தக் கிண்ணியைக் கொடுத்து காராம்பசுவில் பால் கரந்துவருமாறு கூறியுள்ளார்.
வியப்படைந்த அச்சிறுவன் ஓட்டைக் கிண்ணியில் எப்படி சாமி பால் கரந்து வரமுடியுமெனக் கேட்டான்.
அதற்கு சுவாமிகள் போய் கரந்துபார் என்றார். சிறுவனோ தயக்கத்துடன் சென்று பாலைக்கரக்க அப்பால் ஒரு துளி கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது.
ஆச்சரியம் அடைந்த சிறுவன் சுவாமி அவர்களிடம் பாலைக் கொடுத்து வணங்கினான்.🙇♂️
பின்னர் வீடு திரும்பிய அச்சிறுவன் அன்று நடந்த அதிசியத்தை ஊர்மக்களிடம் கூறினான்.
அது கேட்ட மக்கள் அனைவரும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.
இச்செய்தி காடுத்தீ போல சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் பரவியது.
நாகமலையைச் சுற்றியுள்ள பல கிராமத்தினர் திரண்டு சென்று சுவாமி அவர்களை வணங்கி அருளாசி பெற்றனர்.
பின்னர் ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சுவாமிகள் தாம் எந்த இடத்திற்கு வரவேண்டுமென்பதை இந்த காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் எனக்கூறி சக்திவாய்ந்த இந்தக் காந்த கிண்ணியை இங்கிருந்து எறிகிறேன் அது எங்கு விழுகிறதோ அங்கு தான் நான் வந்து தங்கி அங்கேயே ஜீவசமாதி அடையவும் திருவுளங்கொண்டுள்ளேன் எனக்கூறினார்.
நாகமலை உச்சியிலிருந்து தான் நிருவிகற்ப ஜீவசமாதி அடையக்கூடிய இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அக்கிண்ணியை வான்வெளியில் அனுப்பியுள்ளார்.
அது புவிக்காந்த விசை அதிகமாக இருக்குமிடத்தில் மேலே ஏறியும் , குறையும் இடத்தில் கீழிறங்கியும். இவ்வாறு மேலும் கீழும் மிதந்து வந்து அம்மலையில் தென்மேற்கு திசையில் சுமார் 10 Km தொலைவில் உள்ள கானக பகுதியில் மங்கலப்பட்டி என்று வழங்கப்பட்ட ஊருக்கு அருகில் வந்து இறங்கியுள்ளது
அந்த கிண்ணி இறங்கியவுடன் பலத்த சங்குநாதம் அவ்விடத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பித்தது.
அக்கிண்ணியை தொடர்ந்து வந்த குருநாதரின் 16 சீடர்கள் கிண்ணி இறங்கி வந்த இடத்தைப் பார்த்த போது
அது ஒரு கற்பூர வில்வ மரத்தடியில் செந்ராஜ நாக புற்றின் மீது இறங்கி இருப்பதை கண்டு அதை தனது குருநாதரிடம் தெரிவித்தனர்.
சற்குரு அவ்விடத்திற்கு வந்து பாம்பாட்டி சித்தரின் பீஜ மந்திரங்களை கொண்டு அதில் வசித்த செந்நாகத்திற்கு முக்தி தந்து அந்த புற்றின் மீது தனது ஜீவ சமாதி பீடத்தை அமைக்குமாறு கேட்டுகொண்டார்.
மங்கலபட்டி கிராமத்தில் இருந்த மக்கள் எல்லாம் சங்கொலியை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.
அங்கு கிண்ணியைக் கண்ட மக்கள் ஆனந்தத்தில் கூத்தாடினர். சுவாமி அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தனர்.
கிண்ணி வந்து விழுந்ததால் அன்று முதல் அந்த இடம் கிண்ணிமங்கலம் என்ற திரு நாமத்தால் வழங்கப்படுகிறது.
சுவாமிகளின் சித்து விளையாடல்கள்
சுவாமிகள் அங்குள்ள குட்டிச் சுவரில் அமர்ந்து கொண்டு கூடி இருந்தவர்களுக்கெல்லாம்
மண்ணை அள்ளி அவரவர் விரும்பிய பதார்த்தங்களை தன் அஷ்டமாசித்தியால் வரவழைத்து வழங்கிக் கொண்டிருந்தார்.💥
அப்பொழுது அந்த வழியாக வந்த மன்னன் தான் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி இல்லாமல் கூட்டமாகக் கூடி நின்ற மக்களை பார்த்து வெகுண்டெழுந்தான்.
இதற்கு காரணமான சுவாமி அவர்களிடம் வந்த மன்னன், ஒரு குட்டி சுவரில் அமர்திருக்கும் சாமியாராகிய உனக்கு அவ்வளவு செருக்கா! நான் வருவது கூட உன் கண்களுக்குத் தெரியவில்லையா? எனக் கோபத்துடன் கேட்டான்.
அது கேட்ட சுவாமிகள் ஆனந்தப் புன்னகையுடன் தான் அமர்திருந்த குட்டிச் சுவரை தன் திருகரத்தால் தட்டினார் அவரது தவவலிமையால் குட்டி சுவரு கடிவேகக் குதிரையானது.
இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் ஆச்சரியமும் கோபமும் அடைந்தான்.
எங்கே உன் குதிரையையும் என் குதிரையையும் ஓடவிடுவோம்,
எந்த குதிரை ஜெயிக்கிறது என பார்ப்போம் என்றான்.
போட்டிக்கு ஒத்துக்கொண்டார் சுவாமிகள்
இரு குதிரைகளையும் ஓடவிட்டனர். சுவாமி அவர்களின் குதிரையோ சற்று தூரம் ஓடுவதும் சற்று விண்ணில் பறப்பதும் பின்னர் தரையில் ஓடுவதுமாக அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.
தரையில் ஓடும் குதிரையைப் பார்த்திருக்கிறேன் விண்ணில் பறக்கும் அதிசயக் குதிரையை இங்கு தான் கண்டேன் என கூறி சுவாமி அவர்களின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கித் தான் அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருளுமாறு மன்னன்
வேண்டி நின்றான்.
அருள்நிறை அமுதக்கடலான ஸ்வாமிகள் ஆனந்த புன்னகையுடன் தன் தவறை உணர்ந்த மன்னனை மன்னித்து அருளாசி வழங்கினார்கள்.🙌
மன்னன் சுவாமி அவர்களிடம் பணிவுடன் தங்களுக்கு ஏதாவது திருப்பணி செய்யவிரும்புவதாகக் கூறி, சுவாமி அவர்களின் கட்டளையை வேண்டி நின்றான்.
சுவாமி அவர்கள் அவன் வேண்டுகோளை ஏற்று தான் ஜீவ சமாதி அடைய உள்ளதாகவும் அதற்கு அழகிய திருகோயிலை நிர்மானிக்கும்படியும் மன்னனை பணித்தார்.
மேலும் மடாலாயத்திற்கு மானியமாக தன் குதிரை கால் பதித்து வட்டமிட்ட நிலத்தினை வழங்குமாறும் கட்டளையிட்டார்.
சுவாமி அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்ட மன்னன் கோயில் திருப்பணிகளை ஆரம்பித்தான்.
ஸ்வாமிகள் மடாலயத்தின் அக்கினிமூலையில் அக்கினி தீர்த்தத்தை உருவாக்கினார்.
அங்கு மடாலய திருப்பணிக்கு வந்த சிற்பிகளில் ஒருவன் கண் பார்வையற்றவனாக இருந்தான்.
அவனை கண்ணுற்ற ஸ்வாமிகள் தான் உருவாகிய அக்கினி தீர்த்தத்தில் குளித்து வர பணித்தார்.
அவ்வாறே அந்த சிற்பியும் செய்ய கண் பார்வை பெற்று பேருவகை கொண்டான்.
கண்ணொளி தந்த கருணை கடலுக்கு சிற்றுளியால் ஒளி வீசும் பல அழகிய சிற்பங்கள் நிறைந்த இந்த மடாலயத்தை அமைத்து கொடுத்தான்.
சுவாமிகள் ஜீவனை சிவனாக்கி அன்பே சிவமயமாய் அமர்ந்து அருள்பாலிக்க திருவுளம் கொண்டு கிண்ணிமங்கலம், சோழவந்தான், மதுரையில் காகாதோப்பு, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஐந்து ஊர்களில் மடாலயங்கள் நிறுவினார்.💥
தன் சீடர்களை அழைத்து வைகாசி மாதம் பூரம் நட்சத்திரமும் அட்டமி திதியும் கூடிய சுப தினத்தில் ஜீவா சமாதி அடையப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்தார்.
உவாமிகள் கேட்டுகொண்டதன்படி பழனி மலையிலிருந்து சித்த குழுக்கள் அவ்விடத்திற்கு வந்து சுவாமிகளின் நிர்விகல்ப சமாதிக்கான பூஜைகளை செய்தபோது குருநாதரின் குருநாதன் பழனியிலிருந்து அவ்விடத்திற்கு வந்து தனது சீடருக்கான அனைத்து பூஜைகளையும் தானே செய்தார்
நிர்விகல்ப சமாதிக்குரிய அக்கினியாக தானே சூரிய சந்திர நாள் உள்ளவரை தனது சீடருக்காக இருப்பேன் என உறுதி கூறி அவரது மூல வாசியை திறந்து வைத்தார்.
நிர்விகல்ப சமாதி அடையும் போது ஒரு ஆத்மா சிரஸிலிருந்து 12 வது அங்குலத்தில் இருக்க கூடிய ஏக பரபிரம்ம நிலையில் அடையும் .
1008 இதழ்களை உடைய சக்கரத்தை அடையும் போது ஆண் பெண் பேதமற்ற ஏக நிலையடைந்து , இப்புவி உலகில் எவ்விதத்தில் கிடைக்கும் அனைத்து வித இன்பங்களை காட்டிலும் கோடி மடங்கு அதிகமாக கிடைக்கும் பேரின்ப நிலை அடையும்.
அங்கே சதாசிவமும் ஆனந்த வல்லி தாயாரும் இணைந்த பின் மீண்டும் பிரியாத பிரியா ஆவுடை நிலை அடையும் போது, நிர்விகல்ப சமாதி ஆகி விடும்.
இதே போல் குருநாதன் கேசரி முத்திரை இட்டு, மூலவாசி திறக்கப்பட்டு நிர்விகல்ப நிலை அடையும் போது அவரது உடம்பிலிருந்து மிகப்பெரிய பேரொளி அவரை சுற்றி பரவியது.
அவ்வொளி அங்கு சூழ்ந்திருந்த அடியார்களது உடம்பை கடந்து செல்லும் போது 10 இமை பொழுது நேரத்திற்கு குருநாதன் அடைந்த பேரின்ப ஆனந்தத்தை அடியார்கள் அனுபவித்தனர்.
இவ்வாறு ஏக பரபிரம்ம நிலையை அனைவரும் உணரும்படி குருநாதன் செய்ததால் அவருக்கு “ஏகநாதர்” என்ற சிறப்பு பெயர் சூட்டி அவரை அடியார்கள் மகிழ்ந்தனர்
குருநாதர் குறித்த சுப தினத்தில் அருட்பெரும் ஜோதி தனிபெருங்கருணையான சுவாமிகள் ஜீவ ஜோதியாக ஜீவ சமாதி எய்தி ஒரே நேரத்தில் மேலே குறிப்பிட்ட ஐந்து ஊர்களிலும் உள்ள தன் அடியவர்களுக்கு அருள் காட்சியளித்து ஆட்கொண்டு அருளிகொண்டிருகின்றார்.
கருணாமூர்த்தி எம்பெருமான் ஏகநாதர் என்ற திருநாமத்துடன் அஷ்டதிக்கு பாலகர்கள் சுற்றிலும் அமர்திருக்க ஆனந்த வல்லியம்மையுடன் பேரானந்தமாய், அருளாந்தமாய் தன் அன்பர்களுக்கு அருளாரமுதை இன்றளவும் அள்ளி வழங்கிகொண்டுள்ளார்.
இங்கு குருநாதரின் குரு
அக்கினியாக திருநந்திக்கு கீழ் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
குருநாதரின் இரண்டு சீடர்களில் ஒருவரான மாணிக்கவாசக தம்பிரான் கன்னி மூலையில் விநாயகர் கீழ் ஜீவசமாதியாக உள்ளார்.
வாயு மூலையில் முருக பெருமானுக்கு கீழ் சபாபதி
தம்பிரான் ஜீவசமாதியாக உள்ளார்.
இவ்வாறு திருநந்தி விநாயகர் முருகப்பெருமான் உள்ள இடங்களில் அ, உ ,இ என்ற முக்கோணத்தில் மூவர் ஜீவசமாதிகள் இங்கு உள்ளன.
இங்கு ஜீவசமாதிக்குரிய ஆனந்த வல்லி அம்மன் அர்த்த மண்டபத்தில் தெற்கு முகமாக அமைந்துள்ளார்.
அந்த மண்டபத்தின் கீழ் நவபாஷாண கிண்ணியும் , அக்கோயிலை சுற்றி
16 சீடர்களும் ஆனந்த வல்லி அம்பாளின் 16 கோணங்களில்
அமைந்துள்ளனர்.
இங்கு மூன்றாவது சீடராக இருந்தவர் குருகுல மடத்தை உருவாக்கி திருமணம் செய்து தனது சுற்றத்தாருக்கான ஊரை உருவாக்கி “கிண்ணிமங்கலம்” என்றும், மடத்தினை “கிண்ணிமடம்” என்றும் வைத்து 117வது வயதில் சமாதி நிலையடைந்துள்ளார்.
அவரது வாரிசுகளின் வழிவந்த குருவழி தொண்டர்
34 வது தலைமுறையில்
மு. அருளானந்தம் என்ற அடியாரின் மூலம் இச்செய்தி சேகரிக்கப்பட்டது.
மடத்தின் பாடத்திட்டங்களாக இருந்த சுமார் 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் மாதத்தில் வரும் இரண்டு தசமி திதிகளில் இலவசமாக வெளிப்படையாக கற்றுத்தரப்படுகிறது.
ஆலயம் செல்லும்வழி: மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ள செக்கானூரணியில் இருந்து 3 கி.மீ தொலைவில் திருமங்கலம் செல்லும் சாலையில் சிக்கம்பட்டியில் இருந்து பிரியும் கீழ்புறச் சாலையில்
1 கி.மீ தொலைவில் கிண்ணிமங்கலம்-
அமைந்துள்ளது.
நேரடி பேருந்து எண் : 27 B
கிண்ணிமங்கலம் அருள்மிகு அனந்த வள்ளி உடனுறை ஏகநாதசுவாமி அதிசய ஆலயத்தில் 81 ஜீவசமாதிகளை தரிசனம் செய்து பயன் அடையுங்கள்







