August 8, 2025
அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்!

அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்!

கோட்ட பொறியாளர் ராணி மீது அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

தாய் தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தீர்வு கிடைக்குமா.?

நிவாரணம் வழங்கி சரிகட்டிய தமிழக அரசு!

கடந்த மே 3 ஆம் தேதி இரவு தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் அருகேயுள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்த நாகராஜ்( 40 ) , ஆனந்தி ( 35 ) தம்பதியினர் தனது மகள் தீக்ஷிதா ( 15 ) ஆகிய மூவரும் ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு இரவு சுமார் 12 மணியளவில் தாராபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவர்களது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். குள்ளாய்பாளையம் அருகே வந்தபோது நெடுஞ்சாலைத்துறை பாலம் கட்டுவதற்காக தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் விழுந்து நாகராஜ் மற்றும் ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா படுகாயம் அடைந்ததோடு இரவு முழுவதும் தங்களை காப்பாற்றுமாறு கத்தி கதறி அழுத சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நமது பத்திரிகையாளர் விசாரித்தபோது பல உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தாராபுரம் – காங்கயம் சாலையில் , சாலை விரிவாக்கம் செய்து, பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பாலம் கட்டப்படும் இடத்தில் இருந்து இரண்டு புறமும் மேடான பகுதியாகும். குறிப்பிட்ட தூரத்தில் பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதை வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் பதாகைகள், தற்காலிக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியான எந்தவொரு அறிவிப்பு பதாகைகள் வைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வந்ததோடு, பள்ளத்தை தோண்டி பாலம் கட்டும் பணிகளை செய்ய உடந்தையாக இருந்துள்ளனர். பாலம் கட்டும் பள்ளத்தின் அருகில் தகர சீட்டுகளை இரண்டு குச்சிகளில் கட்டி வைத்துள்ளனர். விபத்து நடந்து இருவர் உயிரிழந்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் நேரில் பார்வையிடுவதற்கு வரும் தகவல் தெரிந்ததை அடுத்து ஆட்சியர் வருவதற்கு முன்பே பணிகளை அவசர அவசரமாக செய்து முடிக்கப்பட்டன. விபத்து நடப்பதற்கு முன்கூட்டியே எந்த பணிகளும் செய்யவில்லை என்பதாக அப்பகுதியினர் கூறினர்.

தாராபுரத்தில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளை கரூரை மையமாக கொண்ட “ஷாம்ரி இன்ஃபா டெவலப்பர்ஸ்” என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து சாலை பணிகளை செய்து வருகிறது. பணிகள் தொடங்கிய நாளில் இருந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு செய்யாமல் அதிகாரிகளான தாராபுரம் உதவி பொறியாளர் கணேஷ் , உதவி கோட்ட பொறியாளர் கணேஷமூர்த்தி , கோட்ட பொறியாளர் ராணி ஆகியோர் இந்த விசயத்தில் அலட்சியமாக செயல்பட்டு வந்துள்ளனர். தாராபுரம் – காங்கேயம் செல்லும் சாலை அதிகளவில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாகும். அந்த வழியில் பாலம் வேலை நடைபெறுவதை முன்கூட்டிய தெரிந்தும் அதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடக்கும் முன்புவரை அந்த இடத்தை நேரில் பார்வையிடாமல் கோட்ட பொறியாளர் ராணி அலட்சியமாக இருந்துள்ளார். இதற்கு முன்பு ஈரோட்டில் பணியாற்றி வந்தபோது கோட்ட பொறியாளர் ராணி மீது பல்வேறு புகார் எழுந்த நிலையில், பணி மாறுதல் பெற்று தாராபுரம் வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பலர் கோட்ட பொறியாளர் ராணி பணி மாறுதல் பெற்று சென்றதற்காக பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவமும் நடந்துள்ளது. நெடுஞ்சாலை துறையில் நடந்து வரும் பல்வேறு முறைகேடுகள் , அலட்சியமான பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருவர் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் இன்ஜினியர் குணசேகரன், சைட் சூப்பர்வைசர் கெளதம், ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்து ஏற்படுத்தும் விதமாக மரணம் ஏற்படுதல். உரிய பாதுகாப்பு தடுப்புகள் இல்லாமல் விபத்து ஏற்பட காரணமான சம்பவ இடத்தில் எந்த வித எச்சரிக்கை பலகையும் அமைக்காமல் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் முக்கிய நபரான கோட்ட பொறியாளர் ராணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இதுசம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது வாகனம் ஓட்டி சென்றவர்கள் மீதுதான் தவறு இருக்கிறது.

அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை. நெடுஞ்சாலையில் பணிகள் நடக்கும் போது பேரிகார்டர்கள் வைக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு தான் பணிகள் செய்யப்படுகின்றன. அப்படி செய்யாமல் சாலை பணிகளை செய்திருந்தால் சம்பந்தப்பட்ட தனது துறையை சேர்ந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கான்ட்ராக் எடுத்து பணிகளை செய்து வரும் தனியார் நிறுவனம் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு உறவினர் என்பதாக தகவல்கள் கூறுகின்றன. வாகனங்கள் அதிகளவில் சென்று வரும் வழியில் இதுபோன்ற சாலை பணிகள் செய்யும் முன்பு உரிய வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். அப்படி பின்பற்றாமல் அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அமைச்சர் ஆதரவு கரம் நீட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நடந்து வரும் பணிகளுக்கு மேற்பார்வையாளர் கோட்ட பொறியாளர் ராணி என்பவர் தான். ஆனால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல்வேறு தரப்பினரிடையே சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்ட பொறியாளர் ராணி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *