
சாலை மறியல் விவசாயிகள் கைது!
உசிலம்பட்டி.
மதுரை,
உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி சந்தை பாரம்பரியமிக்க இந்த சந்தை பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, பூ மார்க்கெட், வாராந்திர ஆட்டுச் சந்தை உள்ளிட்ட சந்தைகளும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசு நூலகம், வேளாண் துறை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் இப்பகுதியில் இயங்கி வருகின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சந்தை பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதோடு, சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், அவ்வப்போது சாக்கடை கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த சாலையை சீரமைக்கவும், முறையான சாக்கடை வசதி அமைத்து தர கோரி பலமுறை இரு அரசு அலுவலகத்திலும் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாயிகள் சங்க விவசாயிகள் ஒன்றிணைந்து உசிலம்பட்டி பேரையூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் செக்காணூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திலகராணி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அரசு மண்டபத்தில் வைத்துள்ளனர்.
விவசாயிகளின் இந்த சாலை மறியல் போராட்டதால், உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.