August 8, 2025
தென்காசியில் ரூ.119 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படுமா.? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

தென்காசியில் ரூ.119 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படுமா.? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

தென்காசி,மார்ச்.05: தென்காசி புதிய பேருந்து நிலையம் மிக அருகில் அதிநவீன வசதிகளுடன் 6 மாடிகளுடன் 119 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்து கொண்டு இருக்கிறது.

அதி நவீன முறையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த புதிய கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கபடுமா.? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டம் உதயமாக வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேறியது.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து 10 தொகுதிகளில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகளை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பு பிரித்து எடுக்கப்பட்டு கலெக்டர் அலுவலகம் கட்டுமானப்பணி துவங்கியது.தற்போது கட்டுமான பணிகளை பொறுத்தவரை கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடைந்து விட்டது.கட்டிட உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி வண்ணம் பூசுவது பணிகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணம் காட்டி இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் கட்டிடங்கள் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டிய நிலை உள்ளது.சுமார் 20 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இச்சட்டங்கள் கடுமையாக உள்ளது.கிட்டதட்ட 1 லட்சம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட தென்காசி கலெக்டர் அலுவலகம், சுற்றுசூழல் அனுமதி பெறப்படாமல் கட்டுமானப்பணி துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது வரை இந்த அனுமதியை பெற முடியாத சூழல் இருக்கிறது.சமீபத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் ஒரு நிறுவனம் இது போன்று ரூ.100 கோடி செலவிற்கும் தாண்டி கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அது எவ்வாறு பெறப்பட்டது என்ற வழிமுறைகளை அறிந்து அதை பயன்படுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கும் விரைவில் சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தில் குறிப்பிடதக்களவில் பெரிய வளர்ச்சி பணிகள் எதனையும் மேற்கொள்ள முடியாதவாறு ஹாகா(HACA) என்று அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு குழுமத்தின் கீழ் அனுமதி வாங்க வேண்டி உள்ளது.நாடு முழுவதும் மலையிட பாதுகாப்பு குழுமத்தின் கீழ் அனுமதி பெற வேண்டிய பகுதிகளில் தென்காசி மாவட்டத்தின் அதிக பகுதிகள் இடம்பெறுகின்றன.இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகட்டிடங்கள்,வணிக நிறுவனங்கள் போன்றவை ஒரு குறிப்பிட்ட சதுர அடிக்கு மேல் கட்ட முடியாத நிலையும் உள்ளது‌.

கிட்டத்தட்ட தென்காசி மாவட்டம் இத்திட்ட காரணமாக அனைத்து வளர்ச்சி பணிகள் நடைபெற முடியாமல் இடியாப்ப சிக்கலாக மாறி வருகிறது.மேலும் தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்,ஆயுதப்படை மைதானம், குடியிருப்புகள், உயர் அலுவலர்கள் குடியிருப்புகள்,அரசு கல்லூரிகள், மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் இது போன்ற ஒரு மாவட்டத்திற்கு தேவையான கணக்கிடமுடியாத அளவு பல பணிகளை துவங்கவே முடியாத நிலையில் தொலை நோக்கு பார்வை இன்றி சரியான முறையில் பரீசிலனை செய்யபடாமலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக உருவாக்கப்பட்டது எல்லாம் லாயக்கற்று எந்த ஒரு பிரயோசனமில்லாமல் வீணாகி நிற்கிறது தென்காசி,என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *