
கீழக்கரை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ பீடி இலைகளை போலீசார் இன்று அதிகாலை கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே செங்கழநீர் ஓடை கிராம கடற்கரை பகுதியில் இலங்கைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக தனிப்பிரிவு போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் படி கீழக்கரை எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ கீழக்கரை முதல் நிலை காவலர் , திருப்புல்லாணி முதல் நிலை காவலர் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.
போலீசார் வருவதை கண்டு கடற்கரையில் நின்ற 10 பேர் கும்பல் கடலுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
அங்கு அவர்கள் விட்டுச் சென்ற நாமக்கல் பதிவெண் கொண்ட வேனை கைப்பற்றி கீழக்கரை காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை செய்தனர்.
அதில் தலா 30 கிலோ வீதம் 80 மூடைகளில் 2,400 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிந்தது.
படம் விளக்கம் :
பறிமுதல் செய்யப்பட்ட வேன் வேனில் இருந்த 2400 கிலோ பீடி இலை