March 3, 2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 192 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

முன்னதாக, தாட்கோ சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 90% மானியத்துடன் வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13 தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தேனி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக திரட்டப்பட்ட நன்கொடை தொகையுடன் அரசு இணைமானியத் தொகை சேர்த்து ஏழை முஸ்லீம் மகளிருக்கு சிறுதொழில் தொடங்க தலா ரூ.15,000/- வீதம் 10 நபர்களுக்கு ரூ.1,50,000/-க்கான காசோலை வழங்கினார்.

மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் ஆகியோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள அலுவலகங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ரூபாய் 2 இலட்சம் மதிப்பிலான பேட்டரி கார் சேவையினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலெட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளங்கோ, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடாச்சலம், தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *