
அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.19 லட்சம் மோசடி – முதியவர் கைது.
ஈரோடு சூரம்பட்டியில் வசித்து வருபவர் கருப்பண்ணன்(62). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வர்க்கீஸ் (எ) ராஜாவுடன் (64) பழக்கம் ஏற்பட்டுள்ளது. வர்க்கீஸ் டெய்லராகவும் ஆட்சியர் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் சத்துணவு ஆசிரியர், அலுவலக எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியை பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக கருப்பண்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய கருப்பண்ணன், தன் மகனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தரவேண்டும் என கடந்த 2023ல் ஒன்பது லட்சம் ரூபாயை வர்க்கீஸிடம் கொடுத்துள்ளார். ஆனால், தற்போதுவரை அரசு வேலை வாங்கித் தராமலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து கருப்பண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், வர்க்கீஸ் கருப்பண்ணனிடம் மட்டுமின்றி மேலும் ஆறு பேரிடம் 19 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூரில் தலைமறைவாக இருந்த வர்க்கீஸை கைது செய்த ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்ற உத்தரவு படி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.