July 24, 2026
திறக்கப்படாமல் பாழடையும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதாக பொதுமக்கள் வேதனை!

திறக்கப்படாமல் பாழடையும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதாக பொதுமக்கள் வேதனை!

பழனி, மே 28: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாதநாயக்கன்பட்டி ஊராட்சியில் பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம், திறக்கப்படாமலேயே சிதலமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதர்மண்டி கிடக்கும் வளாகம்

பழனி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.

தற்போது இந்த கட்டிடத்தைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத பார் போல மாறிய அவலம்

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த அரசு கட்டிடம், பராமரிப்பின்றி கிடப்பதால் தற்பொழுது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் இங்கு வந்து மது அருந்துவதாகவும், தற்பொழுது இந்த கட்டிடம் ஒரு சட்டவிரோத ‘பார்’ போல மாறிவிட்டதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை: “ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட கட்டிடம் இப்படி வீணாவது வேதனையளிக்கிறது. மாவட்ட நிர்வாகமும், உரிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, இந்த கட்டிடத்தைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி, கட்டிடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இப்பகுதியில் நிலவி வரும் அச்ச உணர்வைப் போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *