
பழனி அருகே 900 ஏக்கர் விவசாய நிலங்களை அழிக்கும் வகையில் வாய்க்கால் கரைகளை உடைத்து குடிநீர் குழாய்கள் அமைப்பு – விவசாயிகள் வேதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூர் கிராமத்தில் சுமார் 900 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கீரனூர் ராஜ வாய்க்கால் மூலம் காலங்காலமாக விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது வேலூர், வேலம்பட்டி மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சிலர், தங்கள் சுய லாபத்திற்காக கீரனூர் வயல்களில் கிணறுகள் வெட்டி, அங்கிருந்து வணிக ரீதியாகத் தண்ணீரை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக எவ்வித அனுமதியும் இன்றி, நள்ளிரவு நேரங்களில் ராஜ வாய்க்கால் மற்றும் அதன் கரைகளை உடைத்து 10-க்கும் மேற்பட்ட ராட்சதக் குழாய்களைப் பதித்து வருகின்றனர்.
“வாய்க்கால்கரைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகரிக்கும் போது கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாழாகும் அபாயம் உள்ளது. மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இப்பகுதியில் விவசாயமே செய்ய முடியாத சூழல் உருவாகும்” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் மற்றும் இப்பிரச்சினை குறித்து ஆலங்குளம் நீர்ப்பாசன விவசாய சங்க துணைத் தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் பேரூர் கழகத் தலைவர் பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் பலர் இன்று கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறையில் புகார் மனு அளித்தனர்.
பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டவிரோதமாகப் பதிக்கப்பட்ட குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அரசு சொத்தைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும்பட்சத்தில் அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.






