
ராமேஸ்வரம் பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம், அக்டோபர் 27:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் என்.எஸ்.கே வீதியில் அமைந்துள்ள தேசிய தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று மிகுந்த ஆன்மீகமும் பக்தி பரவசமும் நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பு விருந்தினராக திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்.
மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தொழிலதிபர் முத்துராமலிங்கம் (எ) வெங்கடராமன், தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை சேர்மன் அரசகுமார், ஆப்பநாடு மறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தேவர் சிலை கமிட்டி தலைவரான முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நவாஸ் கனி (மக்களவை) மற்றும் தர்மர் (மாநிலங்களவை), ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராம்குமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தேசியச் செயலாளர் சுரேஷ், பசும்பொன் முத்துராமலிங்கத் தலைவர் அறக்கட்டளை தலைவர் இசக்கி ராஜா வாழ்த்துரை வழங்கினார்
ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் நாசர் கான், துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகன் (முதுகுளத்தூர்), கருணாஸ் (திருவாடானை), அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, மறவர் நல அறக்கட்டளை செயலர் விஜயகுமார், ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா நாகேந்திர சேதுபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
பெருந்திரளான பக்தர்கள், சமூக தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேவர் சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டு கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுகளை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
வேத மந்திரங்களின் முழக்கத்துடன், புனித தீர்த்தக் குடங்கள் மூலம் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகள் பக்தர்கள் மனதில் ஆனந்தத் திருப்பத்தை ஏற்படுத்தின.
கோவில் முழுவதும் பக்தி இசை, தெய்வீக மணம்கொண்ட பூக்கள், மற்றும் ஆராதனை நிகழ்வுகள் சூழலை மேலும் புனிதமாக்கின.
தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி, சமூக நீதியின் வீரர், சமத்துவத்தின் போதகர் மற்றும் தேசப்பற்றின் அடையாளமாக விளங்கியவர். அவரது வாழ்வியல் தத்துவங்கள் இன்றும் இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
பொதுமக்களுக்கு நேதாஜி ஆட்டோ சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது
வரும் அக்டோபர் 30 ஆம் தேதி, பசும்பொன்னில் தேவர் குருபூஜை மிகுந்த சிறப்புடன் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பசும்பொன்னுக்கு வருகை தரவுள்ளனர்.






